“நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.
அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து,
யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக.
“அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன்.
பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.