இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார்.
அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே” என்றான்.
அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார்.
பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே” என்றார்.
அதற்கு அவர்: “மூன்றுவயது இளங்கன்றையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா” என்றார்.
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை.
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும்.