Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezra Chapters

Ezra 9 Verses

1 {கலப்புத் திருமணத்தைக்குறித்து எஸ்றாவின் ஜெபம்} [PS] இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடம் வந்து: இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இவர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள், அம்மோரியர்கள் என்னும் இந்த தேசங்களின் மக்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
2 எப்படியென்றால், அவர்களுடைய மகள்களிலே தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வம்சம் [* வித்து] தேசங்களின் மக்களோடே கலந்துவிட்டது; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
3 இந்தக் காரியத்தை நான் கேட்டபொழுது, என் ஆடையையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள முடியைப் பிடுங்கித் திகைத்தவனாக உட்கார்ந்திருந்தேன்.
4 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தின் காரணமாக இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற அனைவரும் என்னுடன் கூடிக்கொண்டார்கள்; நானோ மாலை பலி செலுத்தப்படும்வரை திகைத்தவனாக உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
5 மாலை பலி செலுத்தப்படும் நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட ஆடையோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய யெகோவாவுக்கு நேராக விரித்து:
6 என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கப்பட்டுக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகினது; எங்கள் குற்றம் வானம்வரை உயர்ந்துபோனது.
7 எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்வரை நாங்கள் பெரிய குற்றத்திற்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினாலே நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்திற்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்திற்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்.
8 இப்பொழுதும் எங்கள் தேவனாகிய யெகோவா எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு இடத்தைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசமடையச் செய்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபை கிடைத்தது.
9 நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டி, பழுதடைந்த அதைப் புதுப்பிக்கவும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்களின் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச் செய்தார்.
10 இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு போதித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
11 நீங்கள் குடியேறுகிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது; தேசாதேசங்களுடைய மக்களின் அசுத்தத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைவரை நிறையச் செய்த அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது.
12 ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
13 இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செயல்களினாலும், எங்கள் பெரிய குற்றத்தாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்திற்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கும்போது,
14 நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள மக்களோடே சம்பந்தம் கலக்கவும் முடியுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்கும்வரை எங்கள்மேல் கோபமாயிருப்பீர் அல்லவோ?
15 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதின் காரணமாக நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று விண்ணப்பம் செய்தேன். [PE]
×

Alert

×