மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து முடிவு வருகிறது, தேசத்தின் நான்கு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.
இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என்னுடைய கோபத்தை உன்மேல் வரச்செய்து, உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.
என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புகளுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
இப்பொழுது விரைவில் என்னுடைய கடுங்கோபத்தை உன்மேல் ஊற்றி, என்னுடைய கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.
என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புக்களுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் நெருங்குகிறது; வாங்குகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கூட்டத்தின்மேலும் கடுங்கோபம் இறங்கும்.
அவர்கள் உயிருள்ளவர்களுக்குள்ளே இன்னும் உயிரோடு இருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன்னுடைய அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான்.
அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்செய்தும், போருக்குப் போகிறவன் இல்லை; என்னுடைய கடுங்கோபம் அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் இறங்குகிறது.
வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் வாளால் மரிப்பான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் சாப்பிடும்.
அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்திற்காக துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.
தங்களுடைய வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாக இருக்கும்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும் அவர்களுடைய பொன்னும் அவர்களை விடுவிக்கமுடியாது; அவர்கள் அதினால் தங்களுடைய ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்களுடைய வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாக இருந்தது.
அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கு என்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீ என்று இகழப்படத்தக்கதுமான காரியங்களின் சிலைகளை உண்டாக்கினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,
என்னுடைய முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என்னுடைய மறைவான இடத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; கொள்ளைக்காரர்கள் அதற்குள் நுழைந்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
ஆகையால் அந்நியதேசங்களின் துன்மார்க்கர்களை வரச்செய்வேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியச்செய்வேன், அவர்களுடைய பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.
அழிவின்மேல் அழிவு வரும்; தீயசெய்தியின்மேல் தீயசெய்தி வரும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்தில் தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இல்லாமல் ஒழிந்துபோகும்.
ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைப் பயம் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து, மக்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் உன்னதமான தேவன் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.