ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சைத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும்.
புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபீப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம்.
உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.
அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் இருக்கிறது.
நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன்.
என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன்.
நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும்.
எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன்.
செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய்.
உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.