அத்தூதன் உரத்த குரலில் கூவினான்: “அவள் அழிக்கப்பட்டாள்! மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது! அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள். அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று. எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது. அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று.
பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன். “ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில் உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள். பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது.
அவள் கொடுத்ததைப்போலவே நீங்களும் அந்நகருக்கு கொடுங்கள். அவள் கொடுத்ததைப்போல இருமடங்கு திருப்பிச் செலுத்துங்கள். மற்றவர்களுக்கு அவள் தயாரித்த அடர்த்தியான மதுவைப்போல இருமடங்கு அடர்த்தியான மதுவை அவளுக்காகத் தயார் செய்யுங்கள்.
அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள். அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி. நான் விதவை அல்ல. நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள்.
எனவே ஒருநாளில் இக்கேடுகள் அவளுக்கு வரும். அவை மரணம், அழுகை, பெரும் பசியாய் இருக்கும். அவள் நெருப்பால் அழிக்கப்படுவாள். ஏனென்றால் அவளை நியாயந்தீர்க்கிற தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”
“அவளோடு வேசித்தனம் புரிந்து அவளுடைய செல்வத்தைப் பகிர்ந்துகொண்ட பூமியின் எல்லா அரசர்களும் அவள் எரியும்போது வரும் புகையைக் காண்பார்கள். அவளது மரணத்துக்காக அவர்கள் அழுது துக்கப்படுவார்கள்.
அவளது துன்பத்தைக் கண்டு அரசர்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்: “பயங்கரம்! எவ்வளவு பயங்கரம், மாநகரமே, சக்திமிக்க பாபிலோன் நகரமே! உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது.”
“அவளுக்காக உலகிலுள்ள வியாபாரிகள் அழுது துக்கப்படுவார்கள். இப்பொழுது அவர்களின் பொருள்களை வாங்குவதற்கு யாரும் இல்லை என்பது தான் அவர்களின் துயரத்துக்குக் காரணம்.
அவர்கள் தங்கம், வெள்ளி, நகைகள், முத்துக்கள், மெல்லிய ஆடை, இரத்தாம்பர ஆடை, பட்டு ஆடை, சிவப்பு ஆடை, எல்லாவிதமான வாசனைக் கட்டைகள், தந்தத்தால், தங்கத்தால் செய்யப்பட்ட அனைத்து விதமான பொருள்கள், விலையுயர்ந்த மரப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், வெள்ளைக்கல் பொருட்கள், ஆகியவற்றை விற்கின்றனர்.
“உலகிலுள்ள வியாபாரிகள் அவளது துயரங்களுக்கு அஞ்சி அவளை விட்டு விலகுவார்கள். இவர்களே பலவற்றை அவளிடம் விற்று செல்வம் குவித்தார்கள். அவர்கள் அழுது துக்கப்படுவார்கள்.
அவர்கள் சொல்வார்கள்: “பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது! அவள் மெல்லிய துணி, பீதாம்பரம், சிவப்பாடைகளை அணிந்திருந்தாள். அவள் தங்கம், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றால் சிங்காரிக்கப்பட்டாள்.
அத்தனை செல்வமும் ஒரு மணி நேரத்துக்குள் அழிக்கப்பட்டது.” “எல்லா கடல் தலைவர்களும், மாலுமிகளும், கப்பற் பயணிகளும், கடலில் சம்பாதித்தவர்களும் பாபிலோனை விட்டு விலகி நின்றனர்.
தங்கள் தலைமேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் அழுது துக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தமாய்க் கூறினார்கள்: “பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது! கடலில் சொந்தக் கப்பல்களுள்ள அனைவரும் அவளது செல்வத்தால் பணக்காரர்கள் ஆனார்கள்! ஆனால் அவளோ ஒரு மணிநேரத்தில் அழிந்து போனாள்!
அப்போது சக்திமிக்க தூதன் ஒருவன் ஒரு பெரும் பாறையைத் தூக்கி வந்தான். அது ஒரு பெரிய எந்திரக்கல்லைப்போல இருந்தது. கடலில் அப்பாறையைப் போட்டு விட்டு தூதன் சொன்னான்: “இவ்வாறுதான் பாபிலோன் நகரமும் தூக்கி எறியப்படும். அந்நகரம் மீண்டும் ஒருக்காலும் காணப்படாமல் போகும்.
சுரமண்டலங்களையும் மற்ற இசைக் கருவிகளையும் நாதசுரங்களையும் எக்காளங்களையும் மக்கள் வாசித்து எழுப்பும் இசை ஒருபோதும் இனி உன்னிடத்தில் கேட்காது. எந்தத் துறையின் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படமாட்டான். எந்திரங்களின் ஓசை இனி உன்னிடம் கேட்கப்படுவதில்லை.
இனி விளக்குகளின் ஒளி உன்னிடம் பிரகாசிக்காது. மணமகன் மணமகள் ஆகியோரின் சத்தங்கள் இனி உன்னிடம் கேட்காது. உன் வியாபாரிகள் உலகில் சிறந்தவர்களாக இருந்தார்கள். உலக நாடுகள் எல்லாம் உன் மாயத்தால் மோசம் செய்யப்பட்டன.