எனவே, நாங்கள் சுவர் கட்டுவதை முடித்தோம். பிறகு வாசல்களுக்குக் கதவுகளைப் போட்டோம். பின்னர் அவ்வாசல்களைக் காக்க ஆட்களைத் தேர்ந் தெடுத்தோம். ஆலயத்தில் பாடவும் ஆசாரியர்களுக்கு உதவவும் தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுத்தோம்.
அடுத்து, நான் எனது சகோதரனான ஆனானியைத் எருசலேமின் பொறுப்பாளனாக நியமித்தேன். கோட்டையின் தலைவனாக அனனியாவைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஆனானியைத் தோந்தெடுத்தேன். ஏனென்றால் அவன் மிகவும் நேர்மையானவனாக இருந்தான். அநேக மனிதர்கள் செய்வதைவிட அவன் அதிகமாக தேவனுக்கு பயந்தான்.
பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன்.
எனவே என்னுடைய தேவன் என் இதயத்தில் அனைத்து ஜனங்களும் கூடவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கினார். முக்கியமான ஜனங்களையும் அதிகாரிகளையும் பொது ஜனங்களையும் கூட்டத்திற்கு நான் அழைத்தேன். நான் இதனைச் செய்தேன். அதனால் அனைத்து குடும்பங்களையும் பற்றி ஒரு பட்டியல் செய்ய என்னால் முடிந்தது. முன்னால் வந்தவர்களின் வம்ச பட்டியல் எனக்கு அப்பொழுது கிடைத்தது. இதுதான் நான் கண்ட எழுத்துக்கள்:
அதில் கைதிகளாக இருந்து திரும்பி வந்த அம்மாகாணத்தார்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் இந்த ஜனங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டு போனான்.அந்த ஜனங்கள் எருசலேமிற்கும் யூதாவிற்கும் திரும்பி வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகரத்திற்குச் சென்றனர்.
இந்த ஜனங்கள் செருபாபேலோடு திரும்பியவர்கள். யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா ஆகியோர். நாடு கடத்தலிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் கொண்ட பட்டியல்.
தெல்மெலாக், தெல்அர்சா, கேருபில், ஆதோன், இம்மேர் ஆகிய ஊர்களில் இருந்து சில ஜனங்கள் எருசலேமிற்கு வந்தனர். ஆனால் இந்த ஜனங்கள் தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் தந்தைகளின் வம்சத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
ஆசாரியர்களின் குடும்பத்திலிருந்து அபாயா, கோசு, பர்சில்லாய் சந்ததியினர் (கிலேயாவைச் சேர்ந்த பர்சில்லாயின் மகள் ஒருத்தியை ஒரு மனிதன் மணந்ததால், அந்த மனிதன் பர்சில்லாயின் சந்ததியானாக எண்ணப்பட்டான்.)
இந்த ஜனங்கள் தமது வம்சவரலாற்றைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை. அவர்களால் தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தனர். எனவே அவர்களால் ஆசாரியர்களாகச் சேவைச் செய்ய முடியவில்லை. அவர்களின் பெயர்களும் ஆசாரியர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
இந்த ஜனங்கள் மிகவும் பரிசுத்தமான உணவை உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஊரீம், தும்மீம் என்பவைகளை உபயோகித்து தலைமை ஆசாரியன் தேவனிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்வரை இவ்வகையான எந்த உணவையும் அவர்களால் உண்ணமுடியவில்லை.
(66-67) எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர்.
ஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர்.