(28-29) எனவே இந்த ஜனங்கள் அனைவரும் தேவனிடம் இந்த விசேஷ வாக்குறுதியை அளித்தனர். அவர்கள் வாக்குறுதியைக் கடைபிடிக்காவிட்டால் தீமைகள் வரட்டும் என்று வேண்டினர். தேவனுடைய சட்டத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று ஜனங்கள் அனைவரும் வாக்குறுதிச் செய்தனர். தேவனுடைய சட்டம் அவரது தாசனாகிய மோசேயின் மூலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஜனங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளையும், சகல விதிகளையும், போதனைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்று வாக்குறுதிக் கொடுத்தனர். இப்பொழுது வாக்குறுதிச் செய்துக்கொண்ட ஜனங்கள் இவர்கள்தான்: ஜனங்களில் மற்றவர்களான ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய ஊழியர்களும், தேவனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்காக மற்ற ஜனங்களிடமிருந்து தங்களை பிரித்துக்கொண்ட இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இருந்தனர். அவர்கள் மனைவிகளும் அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களுமாகிய அனைவரும் கவனித்து புரிந்துகொள்பவர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் முக்கியமானவர்களோடு சேர்ந்துக்கொண்டு தேவனுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிய ஒப்புக்கொள்ள வைத்தனர். தேவனுடைய சட்டத்திற்கு கீழ்ப்படியாவிட்டால் தமக்குத் தீமைகள் ஏற்படட்டும் என்ற சாபத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள், “எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் மகன்களுக்கு எங்கள் மகள்களை கொடுக்கமாட்டோம். எங்கள் மகன்களுக்கு எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் மகள்களைக் கொள்ளமாட்டோம் என்று வாக்குறுதிச் செய்தனர்.
“நாங்கள் ஓய்வு நாளில் வேலைச் செய்யமாட்டோம். எங்களைச் சுற்றியிருப்பவர்கள் அந்நாளில் தானியங்களையோ மற்ற பொருட்களையோ கொண்டுவந்து விற்றால் நாங்கள் அவற்றை அச்சிறப்பான நாளிலும் மற்ற ஓய்வு நாட்களிலும் வாங்கமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், நாங்கள் எங்கள் பூமியில் நாத்து நடுதல் அல்லது வேறு வேலைகளைச் செய்யமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், மற்றவர்கள் எங்களுக்குத் தர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்வோம்.
“நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டளைக்குப் கீழ்ப்படிவோம். எங்கள் தேவனை மகிமைப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்து ஆலயபணிக்கு உதவுவோம்.
இப்பணமானது ஆசாரியர்கள் ஆலயத்தில் மேஜையின் மேல் வைக்கும் விசேஷ ரொட்டிக்கும் சமூகத்தப்பங்களுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தானியக் காணிக்கைக்கும், தகனப்பலிக்கும் கொடுக்கப்படும். ஓய்வு நாட்களிலும், பிறைச் சந்திர நாட்களிலும் மற்றும் சிறப்புக் கூட்டங்களிலும் செலுத்தும் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தேவாலயத்திற்குத் தேவைப்படும் எவ்வித வேலைகளுக்கும் கொடுக்கப்படும்.
“ஆசாரியரும் லேவியர்களும் ஜனங்களுமாகிய நாங்கள் சீட்டுப்போட்டோம். ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் நமது தேவனுடைய ஆலயத்திற்கு எந்தக் குடும்பத்தார் விறகை அன்பளிப்பாக கொண்டுவரவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு விரும்பினர். நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தில் விறகானது பலிபீடத்தில் எரிக்கப்பட்டது. சட்டத்தில் எழுதப்பட்டபடி நாம் செய்ய வேண்டும்.
“நாம் நமது அறுவடையில் கிடைக்கும் ஒவ்வொரு பழ மரங்களில் முதற்கனிகளையும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அப்பழங்களை கர்த்தருடைய ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவருவோம்.
“சட்டத்தில் எழுதியுள்ளபடி நாம் செய்ய வேண்டியது இதுதான்: எங்கள் மகன்களில் முதல் மகன்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகங்களில் முதலில் பிறந்தவைகளையும் நாங்கள் கொண்டு வருவோம். நாங்கள் முதலில் பிறந்தவற்றை எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குள் கொண்டுவருவோம், அங்கே ஊழியஞ் செய்கிற ஆசாரியர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கொண்டுவருவோம்.
“நாங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சேமிப்பு அறைகளுக்கு ஆசாரியர்களிடம் இவற்றைக் கொண்டு வருவோம்: எங்கள் பிசைந்த மாவில் முதல் பாகத்தையும், எங்களது முதல் தானியக் காணிக்கைகளையும், எங்களது அனைத்து மரங்களிலிருந்து முதல் பழங்களையும், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெயின் முதல் பாகத்தையும் கொண்டு வருவோம். அதோடு எங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தை லேவியர்களுக்குக் கொண்டு வருவோம். ஏனென்றால் நாம் வேலைச் செய்கிற எல்லா பட்டணங்களிலும் லேவியர்கள் அவற்றைச் சேகரித்தனர்.
அவர்கள் விளைச்சலைப் பெறும்போது லேவியர்களோடு ஆரோனின் குடும்பத்திலுள்ள ஒரு ஆசாரியர் இருக்கவேண்டும். பிறகு லேவியர்கள் அப்பொருட்களை எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும். பிறகு அவர்கள் ஆலய கருவூலத்தில் அவற்றை போடவேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்களும் லேவியர்களும் அவர்களின் அன்பளிப்புகளைச் சேமிப்பு அறைகளுக்குக் கொண்டுவரவேண்டும். அவர்கள் தமது தானியம், புதிய திராட்சைரசம் எண்ணெய் ஆகிய அன்பளிப்புகளைக் கொண்டுவருவார்கள். ஆலயத்திற்குரிய அனைத்துப் பொருட்களும் அச்சேமிப்பு அறைகளில் வைக்கப்படும். அங்கே பணியிலுள்ள ஆசாரியர்கள் தங்குவார்கள், பாடகர்களும், வாசல் காவலாளர்களும் அங்கே தங்குவார்கள். “எங்கள் தேவனுடைய ஆலயத்தின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று நாங்கள் அனைவரும் வாக்குக்கொடுக்கிறோம்” என்றனர்.