English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Matthew Chapters

Matthew 19 Verses

1 இவை அனைத்தையும் கூறிய பின்னர், இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். யோர்தான் நதிக்கு மறுகரையில் உள்ள யூதேயாவிற்கு இயேசு சென்றார்.
2 மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார்.
3 இயேசுவிடம் வந்த பரிசேயர்கள் சிலர் இயேசுவைத் தவறாக ஏதேனும் சொல்ல வைக்க முயன்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா?” என்று கேட்டனர்.
4 அவர்களுக்கு இயேசு, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் [✡ஆதி. 1:27, 5:2-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள்.
5 தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’ [✡ஆதி. 2:24-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.]
6 எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார்.
7 அதற்குப் பரிசேயர்கள், “அப்படியெனில் எதற்காக ஒருவன் விவாகரத்து பத்திரம் எழுதிக் கொடுத்துத் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளான்?” என கேட்டார்கள்.
8 அதற்கு இயேசு, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை.
9 நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார்.
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள்.
11 அதற்கு இயேசு, “திருமணம் குறித்த இவ்வுண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தேவன் சிலரை அப்படிப்பட்ட கருத்தை ஒப்புக்கொள்ள ஏதுவாக்கியுள்ளார்.
12 சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார். (மாற். 10:13-16; லூ. 18:15-17)
13 பிறகு, இயேசு தம் குழந்தைகளைத் தொடுவார் என்பதற்காகவும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார் என்பதற்காகவும் மக்கள் தம் குழந்தைகளை அவரிடம் அழைத்து வந்தனர். இதைக் கண்ட சீஷர்கள் இயேசுவிடம் குழந்தைகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு மக்களிடம் கூறினார்கள்.
14 ஆனால் இயேசு, “குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம், ஏனென்றால் பரலோக இராஜ்யம் இக்குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே உரியது” என்று கூறினார்.
15 அதன் பின் குழந்தைகளைத் தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்றார். (மாற். 10:17-31 லூ. 18:18-30)
16 ஒரு மனிதன் இயேசுவை அணுகி, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
17 இயேசு அவனிடம், “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.
18 “எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன். அதற்கு இயேசு, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது.
19 உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். [✡யாத். 20:12-16-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’ ” [✡லேவி. 19:18-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று பதில் சொன்னார்.
20 அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான்.
21 இயேசு அவனிடம், “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.
22 ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான்.
23 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம் “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம்.
24 ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார்.
25 இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள், “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர்.
26 இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார்.
27 பேதுரு இயேசுவிடம், “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான்.
28 இயேசு தன் சீஷர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் [*இஸ்ரவேல் முதலில் இஸ்ரவேல் யூதர்களின் நாடாய் இருந்தது. ஆனால் இப்பெயர் அனைத்து தேவனுடைய மக்களையும் குறிக்கப் பயன்பட்டது.] பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.
29 மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான்.
30 உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.
×

Alert

×