இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர்.
பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை.
இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது.
பிறகு யூதேயாவில் இருந்தும், எருசலேமிலிருந்தும், இதுமேயாவில் இருந்தும், யோர்தானுக்கு அக்கரையில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். அத்துடன் தீரு, சீதோன் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு செய்த அற்புதங்களை அறிந்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் வந்தார்கள்.
இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக்கொண்டார்.
பிறகு, இயேசு குன்றின்மீது ஏறினார். அவர் சிலரை தன்னுடன் வருமாறு சொன்னார். இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர். அவர்கள் இயேசுவிடம் சென்றனர்.
அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார். அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அவர்களைப் பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார்.
இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர்.
எருசலேமில் இருந்து வந்த வேதபாரகர், “இயேசுவிடம் பெயல்செபூல் (பிசாசு) உள்ளது. பிசாசுகளின் தலைவனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தி பேய்களை விரட்டுகிறார்” என்றனர்.
“ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும்.
“உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும்.
ஆனால், பரிசுத்தாவியை எவனாவது பழித்து உரைப்பானேயானால் அவனுக்கு என்றென்றைக்கும் மன்னிப்பே இல்லை. அவன் குற்றவாளியாகி என்றென்றைக்கும் குற்ற உணர்வுடையவனாக இருப்பான்” என்றார்.