English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Joshua Chapters

Joshua 9 Verses

1 யோர்தான் நதியின் மேற்கிலுள்ள எல்லா அரசர்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டார்கள். அவர்கள் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரின் அரசர்கள் ஆவார்கள். அவர்கள் மலைகளிலும், சம வெளிகளிலும் வாழ்ந்தனர். லீபனோன் வரைக்குமுள்ள மத்தியதரைக் கடலோரமாக அவர்கள் வாழ்ந்தனர்.
2 இந்த அரசர்கள் ஒருமித்துக் கூடி, யோசுவாவோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் போரிடுவதற்குத் திட்டமிட்டனர்.
3 எரிகோவையும் ஆயீயையும் யோசுவா தோற்கடித்த வகையை கிபியோனின் ஜனங்கள் கேள்விப்பட்டிருந்தனர்.
4 அவர்கள் இஸ்ரவேலரை ஏமாற்ற முடிவெடுத்தனர். இதுவே அவர்கள் திட்டம்: அவர்கள் நைந்துபோன பழைய திராட்சைரசத் தோல் பைகளைச் சேகரித்தனர். அவர்கள் கழுதைகளின் முதுகில் அவற்றை ஏற்றினார்கள். பழைய சாக்குகளை அந்தக் கழுதைகளின் மேல் ஏற்றி, வெகுதுரத்திலிருந்து பயணம் செய்து வருவோரைப் போல் தோற்றம் அளித்தனர்.
5 அவர்கள் பழைய செருப்புகளை அணிந்து, பழைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, உலர்ந்து, பூசணம் பூத்திருந்த பழைய அப்பங்களையும் எடுத்துக்கொண்டனர். தொலைவான இடத்திலிருந்து பயணம் செய்து வந்தவர்களைப் போன்றே அவர்கள் தோன்றினர்.
6 பின்னர் அம்மனிதர்கள் கில்காலுக்கு அருகே இருந்த இஸ்ரவேலரின் முகாமிற்குச் சென்றனர். அம்மனிதர்கள் யோசுவா மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களிடமும் சென்று, “நாங்கள் மிகவும் தூரத்திலுள்ள ஒரு தேசத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம். உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறோம்” என்றனர்.
7 இஸ்ரவேலர் அந்த ஏவியரிடம், “நீங்கள் எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், அருகே எங்கேயேனும் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வரைக்கும் உங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்யமாட்டோம்” என்றனர்.
8 ஏவியர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உமது பணியாட்கள்” என்றனர். ஆனால் யோசுவா, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
9 அந்த ஆட்கள் அதற்குப் பதிலாக, “நாங்கள் உங்கள் பணியாட்கள். நாங்கள் தூரத்திலுள்ள நாட்டிலிருந்து வந்துள்ளோம். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய மிகுந்த வல்லமையை அறிந்ததால் இங்கு வந்தோம். அவர் செய்த காரியங்களை அறிந்துள்ளோம். அவர் எகிப்தில் செய்தவற்றையும் அறிந்தோம்.
10 யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள எமோரியரின் அரசர்களான அஸ்தரோத் தேசத்திலுள்ள எஸ்போனின் அரசனாகிய சீகோனையும், பாசானின் அரசனாகிய ஓகையும் அவர் தோற்கடித்ததைக் கேள்விப்பட்டோம்.
11 எனவே எங்கள் மூப்பர்களும், ஜனங்களும் எங்களை நோக்கி, ‘உங்கள் பயணத்திற்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள்.’ இஸ்ரவேலரின் ஜனங்களைப் போய்ச் சந்தித்து, அவர்களிடம், ‘நாங்கள் உங்கள் பணியாட்கள். எங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள்.
12 “எங்கள் அப்பத்தைப் பாருங்கள்! நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு உங்களிடம் வரும்படி பயணம் செய்யத் துவங்கியபோது அது சூடாகவும், புதியதாகவும் இருந்தது. ஆனால் இப்போது உலர்ந்து பழையதாகப் போய்விட்டது.
13 எங்கள் திராட்சைரசப் பைகளைப் பாருங்கள்! நாங்கள் வீட்டிலிருந்து வந்தபோது அவை புதிதாகவும் திராட்சைரசம் நிரப்பப்பட்டவையாகவும் இருந்தன. இப்போது அவை கிழிந்து, பழையனவாகிவிட்டன. எங்கள் உடைகளையும், பாதரட்சைகளையும் பாருங்கள்! நாங்கள் அணிந்து கொண்டிருப்பவை பயணத்தால் கிழிந்துபோயிருப்பதைக் காண்பீர்கள்” என்றனர்.
14 அந்த ஆட்கள் உண்மை பேசுகிறார்களா என்பதை அறிய இஸ்ரவேலர் விரும்பினர். எனவே அவர்கள் அப்பத்தை ருசி பார்த்தனர். ஆனால் அவர்கள் செய்யவேண்டியது என்னவென்று கர்த்தரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.
15 யோசுவா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டான். அவர்களை வாழவிடுவதாக ஒப்பந்தம் செய்தான். யோசுவாவின் இந்த வாக்குறுதிக்கு இஸ்ரவேலின் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
16 மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த ஆட்கள் தங்கள் முகாமிற்கு வெகு அருகாமையில் வாழ்பவர்கள் என்பதை அறிந்துகொண்டனர்.
17 எனவே இஸ்ரவேலர் அம்மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் மூன்றாம் நாள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத் யெயாரீம் என்ற நகரங்களை வந்தடைந்தனர்.
18 ஆனால் இஸ்ரவேல் படையினர் அந்நகரங்களை எதிர்த்துப் போர் செய்யவில்லை. அந்த ஜனங்களோடு அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். ஏனெனில் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு, முன்பு அவர்கள் ஒரு வாக்குறுதியைச் செய்திருந்தனர். ஒப்பந்தம் செய்த தலைவர்களை எதிர்த்து ஜனங்கள் குற்றம் சாட்டினார்கள்.
19 ஆனால் தலைவர்கள், “நாங்கள் வாக்களித்துவிட்டோம். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் வாக்களித்தோம், அவர்களை எதிர்த்து இப்போது போரிட முடியாது.
20 இப்படித்தான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை உயிரோடு விடவேண்டும். அவர்களைக் காயப்படுத்தினால் நாம் அவர்களோடு செய்த வாக்குறுதியை மீறியதற்காக தேவன் நம்மிடம் கோபமடைவார்.
21 எனவே அவர்கள் வாழட்டும். ஆனால் அவர்கள் நமது பணியாட்களாக இருப்பார்கள். அவர்கள் நமக்காக விறகு வெட்டுவார்கள். நம் ஜனங்களுக்காக தண்ணீர் மொண்டு வருவார்கள்” என்று பதிலளித்தார்கள். இவ்வாறு அந்த ஜனங்களுக்கு அளித்த சமாதானத்திற்கான வாக்குறுதியை தலைவர்கள் மீறவில்லை.
22 யோசுவா கிபியோனிய ஜனங்களை அழைத்து, “ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்? உங்கள் தேசம் எங்கள் முகாமிற்கு அருகில் இருந்தது. ஆனால் நீங்களோ தூர தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றீர்கள்.
23 இப்போது, நீங்கள் ஒரு சாபத்தினால் பிடிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அனைவரும் அடிமைகள் ஆவர். அவர்கள் தேவனின் ஆலயத்திற்கு விறகு வெட்டவும், தண்ணீர் மொண்டு வரவும் வேண்டும்” என்றான்.
24 கிபியோனிய ஜனங்கள், “நீங்கள் எங்களைக் கொன்றுவிடுவீர்கள் என்ற பயத்தால் நாங்கள் பொய் சொன்னோம். தேவன் தம் ஊழியராகிய மோசேக்கு இந்த தேசத்தையெல்லாம் கொடுப்பதாக வாக்களித்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இத்தேசத்தில் வசிப்போரைக் கொல்லும்படியாக தேவன் உங்களுக்குக் கூறினார். எனவே நாங்கள் உங்களிடம் பொய் கூறினோம்.
25 இப்போதும் நாங்கள் உங்கள் பணியாட்கள். நீங்கள் சரியென நினைப்பதை எங்களுக்குச் செய்யலாம்” என்றனர்.
26 எனவே கிபியோனிய ஜனங்கள் அடிமைகளாயினர். ஆனால் யோசுவா அவர்களை உயிரோடுவிட்டான். இஸ்ரவேலர் அவர்களைக் கொல்வதற்கு அனுமதிக்கவில்லை.
27 கிபியோனிய ஜனங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிமைகளாக யோசுவா ஆக்கினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் கர்த்தருடைய பலிபீடத்திற்கும் தேவையான விறகு வெட்டி, தண்ணீர் மொண்டு வந்தனர். தேவன் தெரிந்தெடுத்த இடத்தில் எல்லாம் அவர்கள் அவ்வேலைகளைச் செய்தனர். அந்த ஜனங்கள் இன்றைக்கும் அடிமைகளாக உள்ளனர்.
×

Alert

×