English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Jeremiah Chapters

Jeremiah 8 Verses

1 கர்த்தர் சொல்லுகிறதாவது: “அந்தக் காலத்தில் மனிதர்கள் யூதாவின் அரசர்கள் மற்றும் முக்கிய ஆள்வோர்களின் எலும்புகளை அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஆசாரியர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். எருசலேமின் அனைத்து ஜனங்களின் எலும்புகளையும், அவர்களின் கல்லறைகளிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.
2 அவர்கள் அந்த எலும்புகளை தரையின் மீது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு அடியில் பரப்பி வைப்பார்கள். எருசலேம் ஜனங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை நேசித்து, பின்தொடர்ந்து, குறி கேட்டு தொழுதுகொண்டனர். எவரும் அந்த எலும்புகளைச் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்யமாட்டார்கள். எனவே, அந்த ஜனங்களின் எலும்புகள், பூமியின் மேல் எருவைப் போன்று எறியப்படும்.
3 “யூதாவின் பொல்லாத ஜனங்களை நான் கட்டாயப்படுத்தி அவர்களது வீட்டை விட்டும் நாட்டை விட்டும் போகும்படிச் செய்வேன். ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். போரில் கொல்லப்படாத யூதா ஜனங்களில் சிலர் தாம் கொல்லப்பட விரும்புவார்கள்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
4 “எரேமியா! யூதா ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: ‘கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “ ‘ஒரு மனிதன் கீழே விழுந்தால் மீண்டும் அவன் எழுவான் என்பதை நீ அறிவாய். ஒரு மனிதன் தவறான வழியில் போனால், அவன் திரும்பி வருவான்.
5 யூதா ஜனங்கள் தவறான வழியில் சென்றனர். (வாழ்ந்தனர்) ஆனால் எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் ஏன் தவறான வழியில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றனர்? அவர்கள் தங்கள் சொந்தப் பொய்யையே நம்புகின்றனர். அவர்கள் திரும்பி என்னிடம் வர மறுக்கின்றனர்.
6 நான் அவர்களை மிகக் கவனமாகக் கேட்டிருக்கிறேன். ஆனால் எது சரியென்று அவர்கள் சொல்கிறதில்லை. ஜனங்கள் தம் பாவங்களுக்காக வருத்தப்படுவதில்லை. அவர்கள் தாங்கள் செய்தது தீயச் செயல்கள் என்று எண்ணுவதில்லை; ஜனங்கள் எண்ணிப் பார்க்காமலேயே செயல்களைச் செய்கிறார்கள். போரில் ஓடும் குதிரைகளைப் போன்று அவர்கள் இருக்கிறார்கள்.
7 வானத்து பறவைகளுக்குக் கூடச் செயல்களைச் செய்வதற்கான சரியான நேரம் தெரியும். நாரைகள், புறாக்கள், தகைவிலான் குருவிகள் ஆகியவற்றுக்கு புதிய கூட்டிற்குப் பறந்து செல்லவேண்டிய நேரம் தெரியும். ஆனால், எனது ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பது தெரியாது.
8 “ ‘ “எங்களிடம் கர்த்தருடைய போதனைகள் இருக்கிறது. எனவே, நாங்கள் ஞானிகள்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது உண்மையன்று, ஏனென்றால், வேதபாரகர்கள் தம் எழுத்தாணிகளால் பொய்யுரைத்தனர்.
9 கர்த்தருடைய போதனைகளை, அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” கவனிக்க மறுத்துவிட்டனர். எனவே உண்மையில் அவர்கள் ஞானம் உடையவர்கள் அல்ல. அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” பிடிபட்டுள்ளனர். அவர்கள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்துள்ளனர்.
10 எனவே, நான் அவர்களது மனைவியரை மற்றவர்களுக்குக் கொடுப்பேன், நான் அவர்களது வயல்களைப் புதிய உரிமையாளர்களுக்குக் கொடுப்பேன். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை, அவர்கள் அனைவரும் அதனை விரும்புகின்றனர். தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள் வரை அனைவரும் பொய் சொல்லுகின்றனர்.
11 எனது ஜனங்கள் மிக மோசமாகக் காயப்பட்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும். ஆனால் சிறு காயங்களுக்குச் சிகிச்சை செய்வதுபோன்று அவர்கள் சிகிச்சை செய்கின்றனர். “இது சரியாக இருக்கிறது,” என்று கூறுகிறார்கள். ஆனால் அது சரியாகவில்லை.
12 அவர்கள் தாம் செய்கிற தீயச் செயல்களுக்காக அவமானப்பட வேண்டும். ஆனால் அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. அவர்கள் தங்களது பாவங்களுக்காக வெட்கங்கொள்ள அறியாதவர்கள். எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தரையில் வீசி எறியப்படுவார்கள்’ ” கர்த்தர் இவற்றையெல்லாம் சொன்னார்.
13 “ ‘நான் அவர்களுடைய பழங்களையும் விளைச் சலையும் எடுத்துக்கொள்வேன். எனவே, அங்கே அறுவடை இருக்காது என்று கர்த்தர் சொல்லுகிறார். திராட்சைத் தோட்டத்தில் பழங்கள் இராது. அத்திமரத்தில் அத்திப்பழங்கள் இராது. இலைகள் கூட காய்ந்து உதிர்ந்துவிடும். நான் அவர்களுக்குக் கொடுத்தப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள்வேன்.’ ”
14 “எதற்காக நாம் இங்கே சும்மா உட்கார்ந்து இருக்கிறோம். வாருங்கள், பலமான நகரங்களுக்கு ஓடுவோம். நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரிக்க செய்வாரேயானால், நாம் அங்கேயே மரித்துப்போவோம். நாம் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” எனவே, தேவனாகிய கர்த்தர் நாம் குடிப்பதற்கு விஷமுள்ள தண்ணீரைக் கொடுத்தார்.
15 நாம் சமாதானம் அடைவோம் என்று நம்பினோம். ஆனால் நன்மை எதுவும் வரவில்லை. அவர் நம்மை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பேரழிவு மாத்திரமே வந்தது.
16 தாணின் கோத்திரத்தைச் சேர்ந்த நாட்டிலிருந்து பகைவர்களின் குதிரைகளது மூச்சு சத்தம் கேட்கிறது. அவர்களது குதிரைகளின் கனைப்பொலியால் பூமி அதிர்கின்றது. அவர்கள் இந்த நாட்டையும் இதிலுள்ள அனைத்தையும் அழிக்க வந்துள்ளனர். அவர்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் அழிக்க வந்திருக்கிறார்கள்.
17 “யூதாவின் ஜனங்களே! உங்களைத் தாக்க விஷமுள்ள பாம்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாம்புகளைக் கட்டுப்படுத்த முடியாது. அந்தப் பாம்புகள் உங்களைக் கடிக்கும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “தேவனே, நான் மிகவும் வருத்தத்தோடும், பெருந்துயரத்தோடும் இருக்கிறேன்.
19 எனது ஜனங்கள் சொல்வதை கேளும்” இந்த நாட்டின் எல்லா இடங்களிலும் ஜனங்கள் உதவிக்காக அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள், “சீயோனில் கர்த்தர் இன்னும் இருக்கிறாரா? சீயோனின் அரசர் இன்னும் இருக்கிறாரா?” என்று கூறுகிறார்கள். ஆனால் தேவன் கூறுகிறார், “யூதாவின் ஜனங்கள் அவர்களது பயனற்ற அந்நிய விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது! அவர்கள் எதற்காக செய்தார்கள்?” என்று கேட்டார்.
20 ஜனங்கள் சொல்கிறார்கள், “அறுவடை காலம் முடிந்துவிட்டது, கோடைகாலம் போய்விட்டது, நாம் இன்னும் காப்பாற்றப்படவில்லை.”
21 எனது ஜனங்கள் காயப்பட்டிருக்கிறார்கள். எனவே நானும் காயப்பட்டிருக்கிறேன். நான் பேசுவதற்கு மிகவும் வருந்துகிறேன்.
22 உறுதியாக கீலேயாத்தில் கொஞ்சம் மருந்து உள்ளது. உறுதியாக கீலேயாத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார். எனவே, ஏன்? எனது ஜனங்களின் காயங்கள் குணமாகவில்லை?
×

Alert

×