Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Jeremiah Chapters

Jeremiah 51 Verses

Bible Versions

Books

Jeremiah Chapters

Jeremiah 51 Verses

1 கர்த்தர் கூறுகிறார்: "வல்லமையான ஒரு காற்றை நான் வீசச்செய்வேன். நான் அதனை பாபிலோனுக்கும் கல்தேயாவின் தலைவர்களுக்கும் எதிராக வீசச்செய்வேன்.
2 நான் பாபிலோனுக்கு அயல்நாட்டவரை அனுப்புவேன். அவர்கள் பாபிலோனைத் தூற்றுவார்கள். அந்த ஜனங்கள் பாபிலோனிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். நகரத்தைப் படைகள் முற்றுகையிடும். பயங்கரமான பேரழிவு ஏற்படும்.
3 பாபிலோன் வீரர்கள் தங்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தமாட்டார்கள். அவ்வீரர்கள் தங்கள் கவசங்களையும் கூட அணிந்துக்கொள்ளமாட்டார்கள். பாபிலோனிய இளைஞர்களுக்காக இரக்கம்கொள்ளாதே. அவளது படையை முழுவதுமாக அழித்துவிடு.
4 கல்தேயர்களின் தேசத்தில் பாபிலோனிய வீரர்கள் கொல்லப்படுவார்கள். அவர்கள் மோசமாக பாபிலோன் தெருக்களில் காயம் அடைவார்கள்."
5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதாவைத் தனியாகக் கணவனை இழந்த விதவைப் பெண்ணைப்போன்று விடமாட்டார். தேவன் அந்த ஜனங்களை விட்டுவிடமாட்டார். இல்லை, அந்த ஜனங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை விட்டு விலகின குற்றவாளிகள். அவர்கள் அவரை விட்டு விலகினார்கள். ஆனால் அவர் அவர்களை விட்டு விலகவில்லை.
6 பாபிலோனை விட்டு ஓடுங்கள்! உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்! தங்காதீர்கள். பாபிலோனின் பாவத்தால் கொல்லப்படாதீர்கள். பாபிலோனின் ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக கர்த்தரால் தண்டிக்கப்படக் கூடிய காலம் இது! பாபிலோன் அவளுக்கு ஏற்றதான தண்டனையைப் பெறும்.
7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள தங்கக் கிண்ணத்தைப் போன்றிருந்தது. பாபிலோன் உலகம் முழுவதையும் குடிக்கும்படி செய்தது. தேசங்கள் பாபிலோனின் திராட்சைரசத்தைக் குடித்தது. எனவே அவை புத்திமயங்கிப்போயின.
8 ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும். அவளுக்காக அழுங்கள்! அவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்! ஒருவேளை குணம் பெறலாம்!
9 நாம் பாபிலோன் குணமடைய முன்றோம். ஆனால் அவளால் குணம் பெறமுடியாது. எனவே, அவளை விட்டுவிடுங்கள். நம் சொந்த நாட்டுக்கும் நம்மில் ஒவ்வொருவரும் போகவிடுங்கள். பரலோகத்திலுள்ள தேவன் பாபிலோனின் தண்டனையை முடிவு செய்வார். பாபிலோனுக்கு என்ன நேரும் என்பதையும் அவர் முடிவு செய்வார்.
10 கர்த்தர் நமக்காக காரியங்களைச் சரி செய்துள்ளார். வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தர் செய்திருக்கிறவற்றை பற்றி சீயோனில் எடுத்துச்சொல்லுவோம்.
11 அம்புகளைக் கூர்மைப்படுத்துங்கள்! கேடயங்களை வாங்குங்கள்! கர்த்தர் மேதியருடைய அரசர்களின் ஆவியை எழுப்பினார். ஏனென்றால், அவர் பாபிலோனை அழிக்க விரும்புகிறார். பாபிலோனிய ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையைக் கர்த்தர் கொடுப்பார். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பாபிலோன் படை அழித்தது. எனவே கர்த்தர் அவர்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பார்.
12 பாபிலோன் சுவர்களுக்கு எதிராகக் கொடியை உயர்த்துங்கள் மேலும் காவலாளிகளைக் கொண்டு வாருங்கள். அவர்களின் இடங்களில் காவல்காரர்களைப் போடுங்கள். இரகசிய தாக்குதலுக்குத் தயாராகுங்கள். கர்த்தர், தான் திட்டமிட்டப்படிச் செய்வார். பாபிலோன் ஜனங்களுக்கு எதிராக எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார்.
13 பாபிலோனே, நீ மிகுந்த தண்ணீருக்கு அருகில் வாழ்கிறாய். நீ பொக்கிஷங்களோடு செல்வத்துடன் இருக்கிறாய். ஆனால் உனது முடிவு வந்திருக்கிறது. உனது அழிவுக்கான காலம் வந்திருக்கிறது.
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் நாமத்தைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார். "பாபிலோனே, நான் உன்னைப் பல பகை வீரர்களால் நிரப்புவேன். அவர்கள் வெட்டுக்கிளியின் கூட்டத்தைப் போன்றிருப்பார்கள். உனக்கு எதிராகப் போரில் அவர்கள் வெல்வார்கள். அவர்கள் உனக்கு மேல் நின்றுக்கொண்டு வெற்றி முழக்கம் செய்வார்கள்."
15 கர்த்தர் தனது பெரும் வல்லமையைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி உலகத்தைப் படைத்தார். அவர் தனது பேரறிவினால் வானத்தை விரித்தார்.
16 அவர் சத்தமிடுகையில், வானத்திலுள்ள தண்ணீர் இரைந்தது. அவர் பூமி முழுவதும் மேகங்களை அனுப்பினார். அவர் தனது சேமிப்பு அறையிலிருந்து காற்றைக் கொண்டுவந்தார்.
17 ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள். தேவன் என்ன செய்திருக்கிறார் என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. திறமையுள்ள தொழிலாளிகள் பொய் தெய்வங்களின் விக்கிரகங்களைச் செய்தனர். அவ் விக்கிரகங்கள் மாயையான தெய்வங்களே. எனவே, அந்த விக்கிரகங்கள் அவைகளை உருவாக்கின தொழிலாளிகளின் முட்டாள்தனத்திற்கு சான்றாக இருக்கின்றன. அந்த விக்கிரகங்கள் உயிரற்றவை.
18 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். அவை மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. நியாயத் தீர்ப்புக்கான காலம் வரும். அந்த விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
19 ஆனால் யாக்கோபுவின் பங்கு (தேவன்) அப்பயன்ற்ற விக்கிரகங்களைப் போன்றவறில்லை. ஜனங்கள் தேவனை உருவாக்கவில்லை, தேவனே தன் ஜனங்களை உருவாக்கினார். தேவன் எல்லாவற்றையும் உருவாக்கினார். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
20 கர்த்தர் கூறுகிறார், "பாபிலோனே, நீ எனது தண்டாயுதம். நான் உன்னைப் பயன்படுத்தி தேசங்களை நொறுக்கினேன். இராஜ்யங்களை அழிக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
21 நான் குதிரையையும், அதை ஓட்டுபவனையும் நொறுக்க உன்னைப் பயன்படுத்தினேன். இரதத்தையும் தேரோட்டியையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
22 ஆண்களையும் பெண்களையும் நொறுக்கநான் உன்னைப் பயன்படுத்தினேன். இளைஞர்களையும் முதியவர்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன். இளம் ஆண்களையும் பெண்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
23 மேய்ப்பர்களையும் ஆடுகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன். விவசாயிகளையும் பசுக்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன். ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
24 ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன். நான் பாபிலோனிய ஜனங்கள் அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பேன். அவர்கள் சீயோனுக்குச் செய்த அத்தனை தீமைகளுக்கும் திருப்பிக் கொடுப்பேன். யூதாவே, உனக்கு எதிரில்தானே நான் அவர்களைத் தண்டிப்பேன்" கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
25 கர்த்தர் கூறுகிறார்: "பாபிலோனே, நீ ஒரு அழிக்கும் மலை. நான் உனக்கு எதிராக இருக்கிறேன். பாபிலோனே, முழு நாட்டையும் அழித்துவிட்டாய். நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் எனது கையை உனக்கு எதிராக வைப்பேன். நான் உன்னைக் கன்மலையிலிருந்து உருட்டுவேன். நான் உன்னை எரிந்துப்போன மலையாக்குவேன்.
26 ஜனங்கள் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் ஆக்க பாபிலோனிலிருந்து எந்த கல்லையும் எடுக்கமாட்டார்கள். ஜனங்கள் மூலைக்கல்லுக்குப் போதுமான அளவு பெரிய கல்லைக் கண்டுப்பிடிக்கமாட்டார்கள். ஏனென்றால், உனது நகரமானது கற்களின் குவியலாக என்றென்றைக்கும் இருக்கும்" கர்த்தர் இவற்றைக் கூறினார்.
27 "இந்நாட்டில் போர்க்கொடியை ஏற்றுங்கள்! அனைத்து நாடுகளிலும் எக்காளத்தை ஊதுங்கள்! பாபிலோனுக்கு எதிராகச் சண்டை செய்ய தேசங்களைத் தயார் செய்யுங்கள்! அந்த இராஜ்யங்களைப் பாபிலோனுக்கு எதிராகப் போரிட அழையுங்கள். ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ். அதற்கு எதிராகப் படை நடத்திச்செல்ல ஒரு தளபதியைத் தேர்ந்தெடு. வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போன்ற குதிரைகளை ஏராளமாக அனுப்பு.
28 அவளுக்கு எதிராகப் போரிட தேசங்களைத் தயார் செய். மேதியா தேசத்தின் அரசர்களைத் தயார் செய். அவர்களின் ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் தயார் செய். பாபிலோனுக்கு எதிராகப் போரிட அவர்கள் ஆளும் தேசங்களைத் தயார் செய்.
29 நிலமானது வலியோடு இருப்பதுப்போன்று அசைந்து நடுங்குகிறது. கர்த்தர் தனது திட்டப்படி பாபிலோனுக்குச் செய்யும்போது தேசம் நடுங்கும். கர்த்தருடைய திட்டம் பாபிலோன் தேசத்தை காலியான வனாந்தரமாக்குவதே. அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
30 பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள். அவர்கள் தங்கள் கோட்டைகளில் தங்கினார்கள். அவர்களின் பலம் போயிருக்கிறது. அவர்கள் திகிலடைந்த பெண்களைப்போன்று இருக்கிறார்கள். பாபிலோனின் வீடுகள் எரிந்துக்கொண்டிருக்கின்றன. அவளது கதவின் கட்டைகள் உடைக்கப்படுகின்றன.
31 ஒரு தூதுவன் இன்னொருவனைப் பின் தொடருகிறான். அவர்கள் பாபிலோன் அரசனிடம் அவனது நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.
32 ஆற்றைக் கடக்கும் வழிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சகதியான நிலம் எரிந்துக்கொண்டிருக்கின்றன. பாபிலோனிய வீரர்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்."
33 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், "பாபிலோன் மிதிக்கப்படும் களத்தைப்போன்று உள்ளது. அறுவடை காலத்தில் ஜனங்கள் பதரிலிருந்து தானியத்தைப் பிரிக்க அடிப்பார்கள். பாபிலோனை அடிக்க வேண்டிய காலம் விரைவாக வந்துக்கொண்டிருக்கிறது."
34 சீயோன் ஜனங்கள் இவ்வாறு கூறுவார்கள், "பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் கடந்த காலத்தில் எங்களை அழித்தான். கடந்த காலத்தில் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்கினான். கடந்த காலத்தில் அவன் எங்கள் ஜனங்களைக் கொண்டுப் போனான். நாங்கள் காலியான ஜாடியைப் போன்றிருந்தோம். எங்களிடமிருந்த சிறந்தவற்றை அவன் எடுத்தான். அவன் பெரிய ராட்சதனைப்போன்று வயிறு நிறையும்வரை தின்றுக்கொண்டிருந்தான். எங்களிடமுள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு எங்களை எறிந்துவிட்டான்.
35 எங்களைத் தாக்க பாபிலோன் பயங்கரமானவற்றைச் செய்தது. அவை இப்பொழுது பாபிலோனுக்கு ஏற்படவேண்டுமென்று நான் விரும்புகிறேன்." சீயோனில் வாழ்கின்ற ஜனங்கள் அவற்றைச் சொல்வார்கள்: "பாபிலோனிய ஜனங்கள் எங்கள் ஜனங்களைக் கொன்ற குற்றம் உள்ளவர்கள். இப்பொழுது அவர்கள் தாம் செய்த தவறுக்குத் தண்டிக்கப்படுகிறார்கள்" எருசலேம் நகரம் அவற்றைச் சொல்லும்.
36 எனவே கர்த்தர் கூறுகிறார், "யூதா உன்னை நான் பாதுகாப்பேன். பாபிலோன் தண்டிக்கப்படும் என்பதை நான் உறுதி செய்வேன். பாபிலோன் கடலை நான் வற்றச் செய்வேன். நான் அவளது நீரூற்றுக்களை வற்றச் செய்வேன்.
37 பாபிலோன் அழிந்த கட்டிடங்களின் குவியலாக ஆகும். பாபிலோன் காட்டு நாய்கள் வாழத்தக்க இடமாகும். ஜனங்கள் கற்குவியலைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் பாபிலோனைப் பற்றி நினைக்கும்போது தங்கள் தலைகளை அசைப்பார்கள். ஜனங்கள் எவரும் வாழாத இடமாக பாபிலோன் ஆகும்.
38 "பாபிலோன் ஜனங்கள் கர்ச்சிக்கிற இளம் சிங்கங்களைப் போன்றவர்கள். அவர்களது சத்தம் சிங்கக் குட்டிகளைப் போன்றிருக்கும்.
39 அந்த ஜனங்கள் வல்லமை மிக்க சிங்கங்களைப் போன்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒரு விருந்துக் கொடுப்பேன். நான் அவர்களைக் குடிபோதையேறினவர்களாக்குவேன். அவர்கள் சிரிப்பார்கள். நல்ல நேரத்தைப் பெறுவார்கள். பிறகு அவர்கள் என்றென்றும் தூங்குவார்கள். அவர்கள் என்றும் விழிக்கமாட்டார்கள்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
40 "பாபிலோன் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும். ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாடுகள் போன்றிருக்கும். நான் அவற்றை வெட்டுவதற்குக் கொண்டு செல்வேன்.
41 "சேசாக்கு" தோற்கடிக்கப்படும். பூமியிலே சிறந்ததும் கர்வமுமுள்ள நாடு எவ்வாறு சிறைப் பிடிக்கப்படும்? மற்ற தேசங்களில் உள்ள ஜனங்கள் பாபிலோன் பாழாய்ப்போவதை கவனித்துப் பார்ப்பார்கள். அவர்கள் பார்க்கின்றவை அவர்களைப் பயப்படுத்தும்.
42 பாபிலோன் மீது கடல் எழும்பும். அதன் இரைச்சலான அலைகள் அவளை மூடும்.
43 பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும். பாபிலோன் வறண்ட வனாந்தரமாகும். அது ஜனங்கள் வாழாத தேசமாகும். ஜனங்கள் பாபிலோன் வழியாகப் பயணம்கூட செய்யமாட்டார் கள்.
44 பாபிலோனிலுள்ள பொய்த் தெய்வமான பேலைத் தண்டிப்பேன். அவன் விழுங்கிய ஜனங்களை வாந்திப்பண்ணும்படி செய்வேன். பாபிலோனைச் சுற்றியுள்ள சுவர்கள் கீழே விழும். மற்ற தேசத்தார்கள் பாபிலோனுக்கு வருவதை நிறுத்துவார்கள்.
45 எனது ஜனங்களே, பாபிலோன் நகரத்தை விட்டு வெளியே வாருங்கள். உங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுங்கள். கர்த்தருடைய பெருங்கோபத்திலிருந்து ஓடுங்கள்.
46 "எனது ஜனங்களே, பயந்து நடுங்கவேண்டாம். வதந்திகள் பரவும் ஆனால் பயப்படவேண்டாம்! இந்த ஆண்டு ஒரு வதந்தி வரும். அடுத்த ஆண்டு இன்னொரு வதந்தி வரும். நாட்டில் நடக்கும் பயங்கரமான சண்டையைப்பற்றி வதந்திகள் இருக்கும். ஆள்வோர்கள் மற்ற ஆள்வோர்களுக்கு எதிராகச் சண்டையிடுவதைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
47 நேரம் நிச்சயம் வரும். பாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன். பாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும். ஏராளமாக மரித்த ஜனங்கள் அந்நகரத்தெருக்களில் கிடப்பார்கள்.
48 பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும். அவர்கள் சத்தமிடுவார்கள். ஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிட்டது" கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
49 "இஸ்ரவேலில் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது. பூமியின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது. எனவே பாபிலோன் விழவேண்டும்!
50 வாளுக்குத் தப்பியவர்களே, வேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள். காத்திருக்காதீர்கள்! நீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள். எருசலேமை நினையுங்கள்.
51 "யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம். நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்தமான இடங்களுக்குள் போயிருக்கிறார்கள்."
52 கர்த்தர் கூறுகிறார்: "நேரம் வந்துக்கொண்டிருக்கிறது, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிப்பேன். அப்போது, புண்ப்பட்ட ஜனங்கள் வலியுடன் நாட்டின் எல்லா இடங்களிலும் அழுவார்கள்.
53 பாபிலோன் வானத்தைத் தொடுகின்றவரை வளரலாம். பாபிலோன் தனது கோட்டைகளைப் பலப்படுத்தலாம். ஆனால் அந்நகரத்தை எதிர்த்து போரிடுமாறு நான் ஜனங்களை அனுப்புவேன். அந்த ஜனங்கள் அவளை அழிப்பார்கள்" கர்த்தர் இவற்றைக் கூறினார்.
54 "பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும். பாபிலோன் தேசத்தில் ஜனங்கள் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்கமுடியும்.
55 விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார். அந்த நகரில் உள்ள உரத்த ஓசைகளை அவர் நிறுத்துவார். பகைவர்கள் இரைகின்ற அலைகளைப்போன்று வருவார்கள். சுற்றிலும் உள்ள ஜனங்கள் அந்த இரைச்சலைக் கேட்பார்கள்.
56 படை வந்து பாபிலோனை அழிக்கும். பாபிலோனின் வீரர்கள் கைப்பற்றப்படுவார்கள். அவர்களின் அம்புகள் உடைக்கப்படும். ஏனென்றால், கர்த்தர் ஜனங்கள் செய்த தீயசெயல்களுக்கு தண்டனையைக் கொடுக்கிறார். கர்த்தர் அவர்களுக்கேற்ற முழு தண்டனையையும் கொடுக்கிறார்.
57 நான் பாபிலோனின் ஞானிகளையும் முக்கியமான அதிகாரிகளையும் குடிமயக்கத்துக்குள்ளாக்குவேன். நான் ஆளுநர்களையும் அதிகாரிகளையும் வீரர்களையும்கூடக் குடிக்கச்செய்வேன். பிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள். அவர்கள் எப்பொழுதும் எழமாட்டார்கள்" அரசர் இவற்றைச் சொன்னார். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
58 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், "பாபிலோனின் அகலமான வலிமையான சுவர் கீழேத்தள்ளப்படும். அவளது உயர்ந்த வாசல்கள் எரிக்கப்படும். பாபிலோன் ஜனங்கள் கடினமான வேலை செய்வார்கள். ஆனால் அது உதவாது. அவர்கள் நகரைக் காப்பாற்ற முயல்வதில் சோர்ந்து போவார்கள். ஆனால் அவர்கள் எரியும் நெருப்புக்கு எண்ணெய் போன்று ஆவார்கள்."
59 இதுதான் எரேமியா அதிகாரி செராயாவிற்குக் கொடுத்த செய்தி. செராயா நேரியாவின் மகன். நேரியா மசெயாவின் மகன். செரயா யூதாவின் அரசன் சிதேக்கியாவோடு பாபிலோனுக்குப் போனான். இது சிதேக்கியா யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் நடந்தது. அப்போது, எரேமியா இச்செய்தியை அதிகாரியான செரயாவிடம் கொடுத்தான்.
60 எரேமியா பாபிலோனுக்கு ஏற்படக்கூடிய பயங்கரங்களைப்பற்றி புத்தகச் சுருளில் எழுதியிருந்தான். அவன் பாபிலோனைப்பற்றி எல்லாவற்றையும் எழுதியிருந்தான்.
61 எரேமியா செராயாவிடம் சொன்னான், "செராயா, பாபிலோனுக்குப் போ, இச்செய்தியை வாசிப்பதைப்பற்றி உறுதி செய்துக்கொள். எனவே எல்லா ஜனங்களும் உன்னைக் கேட்பார்கள்.
62 பிறகு சொல், ‘கர்த்தாவே, இந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொன்னீர். நீர் அழிப்பீர். எனவே மனிதர்களோ மிருகங்களோ இதில் வாழாது. இந்த இடம் என்றென்றும் காலியான அழிவிடமாக இருக்கும்.’
63 இப்புத்தகச் சுருளை வாசித்து முடிந்த பிறகு இதில் ஒரு கல்லைக்கட்டு. பிறகு இந்தப் புத்தகச் சுருளை ஐபிராத்து நதியில் போடு.
64 பிறகு சொல், ‘இதே வழியில் பாபிலோன் மூழ்கும், பாபிலோன் என்றும் எழாது. பாபிலோனியர் மூழ்கிப் போவார்கள். ஏனென்றால், நான் இங்கே பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்’ எரேமியாவின் வார்த்தைகள் இங்கே முடிகிறது.

Jeremiah 51:23 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×