Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Jeremiah Chapters

Jeremiah 25 Verses

Bible Versions

Books

Jeremiah Chapters

Jeremiah 25 Verses

1 யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் அரசனாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். அவன் அரசனான நான்காவது ஆண்டு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது.
2 எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் எரேமியா தீர்க்கதரிசி பேசிய செய்தி இதுதான்.
3 கடந்த 23 ஆண்டுகளாக நான் மீண்டும் மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆமோனின் மகனான யோசியா யூதாவில் அரசனாக 13 ஆண்டுகளானதை தொடர்ந்து நானும் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்களுக்குக் கர்த்தரிடமிருந்து செய்தியை நான் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை.
4 கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
5 அத்தீர்க்கதரிசிகள், "உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். அத்தீயச் செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள்! நீங்கள் மாறினால், பிறகு, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுத்த நாட்டிற்குத் திரும்பி வருவீர்கள். அவர் அந்த நாட்டை நீங்கள் என்றென்றும் வாழும்படி தந்தார்.
6 அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ அவர்களுக்கு சேவைசெய்யவோ வேண்டாம். யாரோ ஒருவர் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொள்ள வேண்டாம். அது உங்கள் மீது எனக்குக் கோபத்தை மட்டும் ஊட்டும். இவ்வாறு செய்வது உங்களை மட்டுமே பாதிக்கும்."
7 "ஆனால் நீங்கள் என்னை கவனிக்கவில்லை" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. "யாரோ ஒருவரால் செய்யப்பட்ட விக்கிரகங்களை நீங்கள் தொழுதுகொண்டீர்கள். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது. அது உங்களையே பாதித்தது.
8 எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: "நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை.
9 எனவே நான் வடக்கில் உள்ள அனைத்து கோத்திரங்களையும் அனுப்புவேன்" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. "நான் விரைவில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரை அனுப்புவேன். அவன் எனது தாசன். நான் அவர்களை யூதா நாட்டிற்கும் யூதாவின் ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவேன். அந்நாடுகளை எல்லாம் நான் அழிப்பேன். அந்நாடுகளை நான் என்றென்றும் வனாந்தரமாகும்படிச் செய்வேன். அந்நாடுகளை எல்லாம் ஜனங்களை பார்த்து அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று இகழ்ச்சியாக பிரமித்துப் பேசிக்கொள்வார்கள்.
10 அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன்.
11 அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் அரசனுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள்.
12 ஆனால் 70 ஆண்டுகள் ஆனதும் நான் பாபிலோன் அரசனைத் தண்டிப்பேன். நான் பாபிலோன் நாட்டையும் தண்டிப்பேன்." இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. "நான் பாபிலோனியர் நாட்டை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் அந்த நாட்டினை என்றென்றும் வனாந்தரமாக்குவேன்.
13 நான் பாபிலோனுக்குப் பல தீமைகள் வரும் என்று சொல்லி இருந்தேன். அவை அனைத்தும் ஏற்படும். எரேமியா அந்த அயல் நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னான். அந்த எச்சரிக்கைகள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
14 ஆம். பாபிலோனில் உள்ள ஜனங்கள் பல நாடுகளுக்கும் பல பெரிய அரசர்களுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் செய்யப் போகும் அனைத்துச் செயல்களுக்கும் உரிய தண்டனையை நான் கொடுப்பேன்."
15 கர்த்தரும் இஸ்ரவேலின் தேவனுமாகிய கர்த்தர் என்னிடம் சொன்னது: "எரேமியா, எனது கையிலுள்ள ஒரு கோப்பைத் திராட்சைரசத்தை எடுத்துக்கொள். இது எனது கோபமாகிய திராட்சைரசம். நான் உன்னை வேறுபட்ட நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கோப்பையிலிருந்து குடிக்குமாறு அந்நாடுகளைச் செய்.
16 அவர்கள் இந்தத் திராட்சை ரசத்தைக் குடிக்கட்டும். பிறகு அவர்கள் வாந்தி எடுத்து புத்திகெட்டவர்களைப் போல் நடப்பார்கள். அவர்கள் இதனைச் செய்வார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எதிராக நான் பட்டயத்தை விரைவில் அனுப்புவேன்."
17 எனவே, கர்த்தருடைய கையிலிருந்த திராட்சை ரசக் கோப்பையை நான் எடுத்துக்கொண்டு, கர்த்தர் என்னை அனுப்பிய எல்லா நாடுகளுக்கும் நான் சென்றேன். ஜனங்களை அக்கோப்பையிலிருந்து குடிக்கும்படிச் செய்தேன்.
18 நான் இந்தத் திராட்சை ரசத்தை எருசலேம் மற்றும் யூதா ஜனங்களுக்கு ஊற்றினேன். யூதா அரசர்களையும் தலைவர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். நான் இதனைச் செய்தேன். எனவே அவர்கள் காலியான வனாந்தரமாவார்கள். நான் இதனைச் செய்தேன். எனவே, அந்த இடம் மிக மோசமாக அழிக்கப்படும். ஜனங்கள் அதைப்பற்றி இகழ்ச்சியாகப் பேசி பிரமிப்பார்கள். அந்த இடத்தை சபிப்பார்கள். இது நிகழ்ந்தது. யூதா இப்பொழுது அப்படித்தான் இருக்கிறது.
19 எகிப்தின் அரசனான பார்வோனையும் அக் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். கர்த்தருடைய கோபமாகிய கோப்பையை அவனது அதிகாரிகள், அவனது முக்கியமான தலைவர்கள் மற்றும் அவனது அனைத்து ஜனங்கள் ஆகியோரைக் குடிக்கச் செய்தேன்.
20 அரேபியர்கள் அனைவரையும் ஊத்ஸ் நாட்டிலுள்ள எல்லா அரசர்களையும் அக்கேப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். பெலிஸ்தியர்களின் நாட்டிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்க வைத்தேன். அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோத் ஆகிய நகரங்களில் உள்ள அரசர்கள் அவர்கள்.
21 பிறகு, நான் ஏதோம், மோவாப், அம்மோன் ஆகிய ஜனங்களை கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
22 தீரு மற்றும் சீதோனிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். தொலைதூர நாடுகளிலுள்ள அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
23 தேதான், தேமா, பூசு ஆகிய ஜனங்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். தங்கள் நெற்றிப்பக்கங்களில் தலைமுடியை வெட்டிக்கொண்ட அனைவரையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
24 அரபியாவிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். இந்த அரசர்கள் வனாந்தரங்களில் வாழ்கிறார்கள்.
25 சிம்ரி, ஏலாம், மேதியா ஆகிய நாடுகளிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
26 வடநாட்டிலுள்ள அருகிலும் தொலைவிலுமுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களை ஒருவருக்குப் பின் ஒருவராகக் குடிக்கச் செய்தேன். பூமியிலுள்ள அனைத்து ராஜ்யங்களையும் கர்த்தருடைய கோபமாகிய கோப்பையைக் குடிக்கும்படிச் செய்தேன். ஆனால், "சேசாக்கு" (பாபிலோன்) அரசன் அனைத்து நாடுகளுக்கும் பிறகு இக்கோப்பையிலிருந்து குடிப்பான்.
27 "எரேமியா, அந்நாடுகளிடம் சொல். இது தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் சொல்கிறது, ‘எனது கோபமாகிய இக்கோப்பையைக் குடி. இதிலிருந்து குடி. வாந்தி எடு! கீழே விழு. எழவேண்டாம். ஏனென்றால் உன்னைக் கொல்ல ஒரு பட்டயத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.’
28 "அந்த ஜனங்கள் உமது கையிலிருந்து கோப்பையை எடுத்துக்கொள்ள மறுப்பார்கள். அவர்கள் அதைக் குடிக்க மறுப்பார்கள். ஆனால் நீ அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்; நீங்கள் இக்கோப்பையிலிருந்து குடித்துத்தீர வேண்டும்!
29 எனது நாமத்தால் அழைக்கப்படுகிற எருசலேம் நகரத்திற்கு நான் ஏற்கனவே இத் தீமைகளை ஏற்படுத்திவிட்டேன். நீங்கள் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்று ஒரு வேளை நினைக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் தாக்க நான் ஒரு வாளை அழைத்துக்கொண்டிருக்கிறேன்" என்கிறார்" என்பாய். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
30 "எரேமியா, நீ அவர்களுக்கு இச்செய்தியைக் கொடுப்பாய், ‘கர்த்தர் மேலிருந்து சத்தமிடுகிறார். அவர் அவரது பரிசுத்தமான ஆலயத்தில் இருந்து சத்தமிடுகிறார்! கர்த்தர் அவரது மேய்ச்சலிடம் (ஜனங்களிடம்) சத்தமிடுகிறார்! அவரது சத்தங்கள் திராட்சைப்பழங்களில் ரசமெடுக்க நடப்பவர்களின் பாடலைப்போன்று சத்தமாக இருக்கிறது.
31 பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் அச்சத்தம் பரவுகிறது. அனைத்து சத்தம் எதைக் குறித்துள்ளது? எல்லா நாடுகளில் உள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டித்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் ஜனங்களுக்கு எதிராக தம் வாதங்களைச் சொன்னார். அவர் ஜனங்களை நியாயந்தீர்த்தார். இப்பொழுது அவர் தீய ஜனங்களை பட்டயத்தால் கொன்றுக்கொண்டிருக்கிறார்’" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
32 இதைத்தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "நாடுவிட்டு நாடு பேரழிவு விரைவில் பரவும். அவை ஒரு வல்லமை வாய்ந்த புயலைப் போன்று பூமியிலுள்ள எல்லா தொலைதூர இடங்களுக்கும் பரவும்!"
33 நாட்டின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு ஜனங்களின் மரித்த உடல்கள் போய்ச் சேரும். மரித்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். எவரும் அந்த உடல்களை சேகரித்து அடக்கம் செய்யமாட்டார்கள். அவை தரையில் எருவைப்போன்று கிடக்குமாறு விடப்படும்.
34 மேய்ப்பர்களே (தலைவர்களே) நீங்கள் ஆடுகளை (ஜனங்களை) வழிநடத்தவேண்டும். பெருந்தலைவர்களே, நீங்கள் கதறத் தொடங்குங்கள். வலியில் தரை மீது உருளுங்கள், ஆடுகளின் (ஜனங்களின்) தலைவர்களே. ஏனென்றால், இது உங்களை வெட்டுவதற்கான காலம். எங்கும் சிதறிப்போகும், உடைந்த ஜாடியின் துண்டுகளைப்போன்று, கர்த்தர் உங்களை முறித்து சிதறடிப்பார்.
35 மேய்ப்பர்கள் ஒளிந்துக்கொள்ள எங்கும் இடமில்லை. அத்தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
36 நான் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) சத்தமிடுவதைக் கேட்கிறேன். ஆடுகளின் (ஜனங்கள்) தலைவர்களின் புலம்பலை நான் கேட்கிறேன். கர்த்தர் மேய்ச்சலிடங்களை (நாட்டை) அழித்துக்கொண்டிருக்கிறார்.
37 அந்த சமாதானமான மேய்ச்சல் நிலங்கள் (அரண்மனைகள்) அழிக்கப்பட்டு காலியான வனாந்தரங்ளைப்போன்று ஆனது. இது நிகழ்ந்தது. ஏனென்றால், கர்த்தர் கோபமாக இருக்கிறார்.
38 கர்த்தர், தன் குகையை விட்டு வெளியே வரும் ஆபத்தான சிங்கத்தைப்போன்று இருக்கிறார். கர்த்தர் கோபமாக இருக்கிறார்! அந்த கோபம் அந்த ஜனங்களைப் பாதிக்கும். அவர்களின் நாடு காலியான வனாந்தரம்போன்று ஆகும்.

Jeremiah 25:28 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×