Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Isaiah Chapters

Isaiah 45 Verses

Bible Versions

Books

Isaiah Chapters

Isaiah 45 Verses

1 கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசைப் பற்றி இவற்றைக் கூறுகிறார்: "நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள்வேன். அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன். நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது. நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்."
2 "கோரேசே, உனது படைகள் புறப்படட்டும். நான் உனக்கு முன்னால் செல்வேன். நான் மலைகளைச் சமமாக்குவேன். நான் நகரத்தின் வெண்கலக் கதவுகளை உடைப்பேன். நான் கதவுகளில் உள் இரும்புச் சட்டங்களை வெட்டுவேன்.
3 நான் உனக்கு இருளில் பாதுகாக்கப்படுகிற செல்வத்தைத் தருவேன். மறைக்கப்பட்டச் செல்வங்களை நான் உனக்குத் தருவேன். நான் இதனைச் செய்வேன். அதனால் நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய்! நான் இஸ்ரவேலரின் தேவன்! நான் பெயர் சொல்லி உன்னை அழைப்பேன்.
4 எனது தாசன் யாக்கோபுக்காக நான் இவற்றைச் செய்கிறேன். இஸ்ரவேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காக நான் இவற்றைச் செய்வேன். கோரேசே, நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன். நீ என்னை அறியமாட்டாய். ஆனால் நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
5 நான் கர்த்தர்! நான் ஒருவரே தேவன். வேறு தேவன் இல்லை! நான் உனது ஆடைகளை உன் மேல் போட்டேன். ஆனால் இன்னும் என்னை நீ அறிந்துகொள்ளவில்லை.
6 நான் இவற்றைச் செய்கிறேன். எனவே நான்தான் தேவன் என்பதை அனைத்து ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். வேறு தேவனில்லை!
7 நான் ஒளியையும் இருளையும் படைத்தேன். நான் சமாதானத்தையும் தொல்லையையும் படைத்தேன். நானே கர்த்தர்! நானே இவை அனைத்தையும் செய்கிறேன்.
8 "வானத்திலுள்ள மேகங்கள், மழையைப் போல நன்மையைப் பொழியட்டும். பூமி திறக்கட்டும், இரட்சிப்பு வளரட்டும், அதனோடு நன்மையும் வளரட்டும். கர்த்தராகிய நான் அவனைப் படைத்தேன்.
9 "இந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம்மைப் படைத்தவரோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மண்பானையின் உடைந்துபோன துண்டுகளைப் போன்றுள்ளார்கள். ஒருவன் மென்மையும் ஈரமுமான களிமண்ணைப் பானை செய்யப் பயன்படுத்துகிறான். அந்தக் களிமண் அவனிடம், ‘மனிதனே! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்’ என்று கேட்பதில்லை. செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் செய்தவனிடம் கேள்வி கேட்கும் உரிமை இல்லை. ஜனங்களும் இந்த களிமண்ணைப் போன்றவர்களே.
10 ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு வாழ்வு தருகிறார். அந்தப் பிள்ளைகள் அவரிடம், ‘எனக்கு ஏன் வாழ்க்கைக் கொடுத்தாய்’ என்று கேட்க முடியாது. அந்தப் பிள்ளைகள் தம் தாயிடம், ‘எங்களை ஏன் பெற்றீர்கள்’ என்று கேட்க முடியாது.
11 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அவர் இஸ்ரவேலைப் படைத்தார். கர்த்தர் சொல்கிறார், "நான் படைத்த என் பிள்ளைகளைக் குறித்து என்னை கேள்வி கேட்க முடியுமா? நான் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவாயோ?
12 எனவே, பாருங்கள். நான் பூமியைப் படைத்தேன். இதில் வாழும் அனைத்து ஜனங்களையும் படைத்தேன். நான் எனது சொந்த கைகளைப் பயன்படுத்தி வானங்களைச் செய்தேன். வானத்தின் சகல சேனைகளுக்கும் ஆணையிட்டேன்.
13 நான் கோரேசுக்கு வல்லமையைக் கொடுத்தேன். எனவே, அவன் நன்மைகளைச் செய்ய வேண்டும். நான் அவனது வேலையை எளிமையாக்குவேன். கோரேசு எனது நகரத்தை மீண்டும் கட்டுவான். அவன் எனது ஜனங்களை விடுதலை செய்வான். கோரேசு எனது ஜனங்களை எனக்கு விற்கமாட்டான். இவற்றைச் செய்வதற்கு அவனுக்கு எதுவும் கொடுக்க மாட்டேன். ஜனங்கள் விடுதலைச் செய்யப்படுவார்கள். அதற்கான விலை எதுவும் இருக்காது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
14 கர்த்தர் கூறுகிறார், "எகிப்தும் எத்தியோப்பியாவும் வளமாக உள்ளன. ஆனால் இஸ்ரவேலே, அந்தச் செல்வத்தை நீ பெறுவாய். சேபாவிலுள்ள வளர்ந்த ஜனங்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் உனக்குப் பின்னால் நடந்து வருவார்கள். அவர்களின் கழுத்துக்களைச் சுற்றிச் சங்கிலிகள் கிடக்கும். அவர்கள் உனக்கு முன்பு பணிவார்கள். ஜெபம் செய்வார்கள்" இஸ்ரவேலே, தேவன் உன்னோடு இருக்கிறார். வேறு தேவனில்லை.
15 தேவனே! நீர்தான் ஜனங்களால் பார்க்க முடியாத தேவன், நீர்தான் இஸ்ரவேலை மீட்கிறவர்.
16 பல ஜனங்கள் பொய்த் தெய்வங்களைச் செய்கின்றனர். ஆனால், அவர்கள் ஏமாந்து போவார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் அவமானப்படுவார்கள்.
17 ஆனால், கர்த்தரால் இஸ்ரவேல் காப்பாற்றப்படும். அந்த இரட்சிப்பு என்றென்றும் இருக்கும்! மீண்டும் இஸ்ரவேல் அவமானப்படாது!
18 கர்த்தரே தேவன்! அவர் வானத்தையும் பூமியையும் படைத்தார். கர்த்தர் பூமியை அதனுடைய இடத்தில் வைத்தார். கர்த்தர் பூமியைப் படைத்ததும் அது காலியாக இருப்பதை விரும்பவில்லை. அவர் அதனை வாழ்வதற்குரியதாகப் படைத்தார். "நானே கர்த்தர். வேறு தேவன் இல்லை.
19 நான் இரகசியமாக எதுவும் பேசவில்லை. நான் சுதந்திரமாகப் பேசியிருக்கிறேன். உலகத்திலுள்ள இருளில் என் வார்த்தைகளை ஒளிக்கமாட்டேன். காலியான இடங்களில் என்னைத் தேடுமாறு, யாக்கோபின் ஜனங்களிடம் சொல்லவில்லை. நானே கர்த்தர். நான் உண்மையைப் பேசுகிறேன். நான் உண்மையாக இருப்பதை மட்டும் பேசுகிறேன்."
20 "மற்ற நாடுகளில் இருந்து நீங்கள் தப்பித்திருக்கிறீர்கள். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து என் முன்பு வாருங்கள். (இந்த ஜனங்கள் பொய்த் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கி வந்தனர். இந்த ஜனங்கள் அந்தப் பயனற்ற தெய்வங்களிடம் ஜெபம் செய்கின்றனர். ஆனால் அந்த ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியவில்லை.
21 என்னிடம் வருமாறு அந்த ஜனங்களிடம் கூறுங்கள். அவர்கள் இதைப் பற்றி கூடிப்பேசட்டும்). "நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த இவற்றைப் பற்றி உன்னிடம் யார் கூறியது? மிக நீண்ட காலத்திற்கு முன்னரே நான் இவற்றைத் தொடர்ந்து கூறிவருகிறேன். கர்த்தராகிய நானே, இவற்றையெல்லாம் சொன்னவர். நான் ஒருவரே தேவன். என்னைப் போன்று வேறே தேவன் உண்டா? என்னைப் போன்று வேறே மீட்பரும், நீதியுள்ள தேவனும் உண்டோ? இல்லை! வேறு தேவன் இல்லை.
22 வெகு தொலைவில் வாழுகின்ற ஜனங்களே, நீங்கள் பொய்த் தெய்வங்களைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். என்னைப் பின்பற்றுவீர்களானால் காப்பாற்றப்படுவீர்கள். நானே தேவன்! நான் ஒருவரே தேவன்.
23 "எனது சொந்த வல்லமையால் நான் ஒரு வாக்குறுதி செய்கிறேன். நான் எதையாவது செய்வதாக வாக்களித்தால், அது உண்மையாக இருக்கும். நான் ஏதாவது நடக்கக் கட்டளையிட்டால், அது நடக்கும். ஒவ்வொருவரும் எனக்கு (தேவன்) முன்பு அடிபணிவதாக" வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரும் என்னைப் பின்பற்றுவதாக வாக்களிக்க வேண்டும்.
24 "நன்மையும் வல்லமையும் கர்த்தரிடமிருந்து மட்டும்தான் வரும்" என்று ஜனங்கள் கூறுவார்கள்." சில ஜனங்கள் கர்த்தர்மேல் கோபமாயிருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய சாட்சிகள் வந்து அவருடைய செயல்களைப் பற்றிக் கூறுவார்கள். அப்போது கோபமாயிருந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.
25 நன்மையானதைச் செய்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் உதவிசெய்வார், அவர்கள் தங்கள் தேவனைப்பற்றி பெரும்மிதம்கொள்வார்கள்.

Isaiah 45:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×