ஆனால் நான் இஸ்ரவேலர்களை மிகுதியாக அழைக்க அவர்களும் என்னை விட்டு மிகுதியாக விலகினார்கள். இஸ்ரவேலர்கள் பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தார்கள். அவர்கள் விக்கிரகங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்தார்கள்.
“ஆனால் எப்பிராயீமை கைப்பிடித்து நடக்கப் பழக்கியது நான். நான் இஸ்ரவேலர்களை என் கைகளில் எடுத்தேன். அவர்களைக் குணப்படுத்தினேன். ஆனால் அவர்கள் அதனை அறியாமலிருக்கிறார்கள்.
நான் அவர்களைக் கயிறுகளால் வழி நடத்தினேன். ஆனால் அவை அன்பு என்னும் கயிறுகள். நான் விடுதலை அளிக்கும் மனிதனைப் போன்றவன். நான் கீழே குனிந்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன்.
“எப்பிராயீமே, நான் உன்னைக் கைவிட விரும்பவில்லை. இஸ்ரவேலே நான் உன்னைப் பாதுகாக்க விரும்புகிறேன். நான் உன்னை அத்மாவைப் போலாக்க விரும்பவில்லை. நான் உன்னை செபோயீமைப் போலாக்க விரும்பவில்லை. நான் என் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறேன். உனக்கான எனது அன்பு பலமானது.
நான் எனது பயங்கரமான கோபம் வெல்லுமாறு விடமாட்டேன். நான் மீண்டும் எப்பிராயீமை அழிக்கமாட்டேன். நான் தேவன். மனிதனல்ல. நானே பரிசுத்தமானவர். நான் உன்னோடு இருக்கிறேன். நான் எனது கோபத்தைக் காட்டமாட்டேன்.
நான் சிங்கத்தைப் போன்று கெர்ச்சிப்பேன். நான் கெர்ச்சிப்பேன். அப்போது எனது பிள்ளைகள் என்னைப் பின்தொடர்ந்து வருவார்கள். எனது பிள்ளைகள் மேற்கிலிருந்து பயத்தால் நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
அவர்கள் எகிப்திலிருந்து பறவைகளைப் போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள். அவர்கள் அசீரியாவிலிருந்து புறாக்களைப்போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள். அவர்களை அவர்களுடைய தாய் நாட்டிற்கு எடுத்துச் செல்வேன்.” கர்த்தர் அதனைச் சொன்னார்.
“எப்பிராயீம் அந்நிய தெய்வங்களால் என்னைச் சூழ்ந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆனால் யூதா இன்னும் தேவனோடு நடந்துக்கொண்டிருக்கிறான். யூதா பரிசுத்தமானவர்களோடு உண்மையாய் இருக்கிறான்.”