Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Hebrews Chapters

Hebrews 12 Verses

Bible Versions

Books

Hebrews Chapters

Hebrews 12 Verses

1 நம்மைச் சுற்றிலும் விசுவாசமுடையவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். விசுவாசம் என்றால் என்ன பொருள் என்று அவர்களது வாழ்க்கை நமக்குக் கூறுகின்றது. நாமும் அவர்ளைப் போல் வாழவேண்டும். நம் முன் நடக்கும் பந்தயத்தில் நாமும் பங்கெடுத்து ஓடவேண்டும். நம் முயற்சியில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது. நம்மைத் தடுத்து நிறுத்துகிற எதையும் நமது வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும். நம்மைப் பற்றுகிற பாவங்களையும் விலக்கிவிட வேண்டும்.
2 நாம் இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும். நம் விசுவாசத்தின் தலைவரே இயேசுதான். நம் விசுவாசத்தை அவர் முழுமையாக்குகிறார். அவர் சிலுவையில் துன்புற்று மரணம் அடைந்தார். ஆனால் சிலுவையின் அவமானத்தைப் பொருட்படுத்தாமல் சிலுவையின் துன்பங்களை அவர் ஏற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு முன்னால் வைக்கப்போகிற மகிழ்ச்சிக்காகவே இத்தனையையும் ஏற்றுக்கொண்டார். எனவே இப்போது அவர் தேவனுடைய வலது புறத்தில் வீற்றிருக்கிறார்.
3 இயேசுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். பாவிகள் அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோது அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக் கொண்டார். இயேசு செய்தது போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள்.
4 நீங்கள் பாவத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் போராட்டம் இன்னும் நீங்கள் கொல்லப்படுகிற அளவுக்கு வன்மையாகவில்லை.
5 நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள். என் மகனே! கர்த்தர் உன்னைத் தண்டிக்கும் போது அதனை அற்பமாக எண்ணாதே. அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே.
6 தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார். தம் மக்களாக ஏற்றுக் கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார். நீதிமொழிகள் 3:11-12
7 எனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் மகனைத் தண்டிப்பது போன்றே தேவன் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
8 நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள்.
9 இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு.
10 உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம்.
11 எந்தத் தண்டனையும் அந்நேரத்தில் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை! ஆனால், பிறகு அதில் பழகியவர்கள், நேர்மையான வாழ்விலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிப்பார்கள். எச்சரிக்கையாக இருங்கள்
12 நீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.
13 சரியான வழியில் நடவுங்கள், அப்போது தான் இரட்சிக்கப்படுவீர்கள். உங்கள் பலவீனம் எந்த இழப்புக்கும் காரணமாகக் கூடாது.
14 எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது.
15 ஒருவனும் தேவனுடைய கிருபையைத் தவறவிடாதபடிக்கும் மக்களுக்கு விஷ மூட்ட வளரும் விஷ வேரைப் போல உங்கள் குழுவுக்கு யாராலும் தொல்லை வராதபடிக்கும் உறுதி செய்யுங்கள்.
16 எவரும் பாலியல் பாவத்தைச் செய்யாதபடி எச்சரிக்கையாயிருங்கள். எவரும் ஏசாவைப் போல் ஆகாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏசா தன் குடும்பத்தின் மூத்த மகன். தன் தந்தையின் சொத்தில் அவனுக்கு இரட்டைப் பங்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஏசா தன் வாரிசுரிமையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒரு வேளை உணவுக்காக அவற்றை விற்றுவிட்டான்.
17 பிறகு ஏசா ஆசியைப்பெற விரும்பிய போதிலும், கண்ணீர்விட்டுக் கதறிக் கெஞ்சினாலும் கூட அவனால் அதைப் பெற முடியவில்லை.ஏனெனில் மனமாறுதலுக்கு வழி காணாமல் போனான்.
18 நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது.
19 எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக் கொண்டார்கள்.
20 ஏனென்றால் ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும் என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை.
21 நான் பயத்தால் நடுங்குகிறேன் என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
22 ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம்.
23 இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன.
24 இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.
25 எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள்.
26 அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.
27 இன்னொரு முறை என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும்.
28 அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக் கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும்.
29 ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.

Hebrews 12:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×