Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Deuteronomy Chapters

Deuteronomy 3 Verses

Bible Versions

Books

Deuteronomy Chapters

Deuteronomy 3 Verses

1 "நாம் பாசானுக்குச் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றோம். பாசானின் அரசன் ஓக்கும், அவனது ஆட்கள் அனைவரும் எத்ரேயில் எங்களுடன் சண்டையிட வந்தார்கள்.
2 கர்த்தர் என்னிடம், ‘ஓக்கைக் கண்டுப் பயப்படாதீர்கள். அவனை உங்களிடம் ஒப்புக்கொடுப்பேன். அவனது ஆட்கள், அவனது நிலம் அனைத்தையும் உங்களிடம் தருவேன். எஸ்போனை ஆண்ட எமோரிய மன்னன் சீகோனைத் தோற்கடித்தது போலவே ஓக்கையும் நீங்கள் தோற்கடிப்பீர்கள்’ என்று கூறினார்.
3 "ஆகவே நமது தேவனாகிய கர்த்தர் பாசானின் அரசனான ஓக்கைத் தோற்கடிக்கச் செய்தார். அவனையும் அவனுடைய ஆட்கள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.
4 அப்பொழுது ஓக்கிற்குச் சொந்தமாயிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவை அர்கோப் பிரதேசத்தில் ஓக்கின் பாசான் நாட்டைச் சேர்ந்த 60 நகரங்கள்.
5 அந்நகரங்கள் அனைத்தும் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. அவை உயர்ந்த மதில்களையும், உறுதியான கதவுகளையும், வலிமையான தாழ்ப்பாள்களையும் கொண்டிருந்தன.
6 சுவர்கள் இல்லாத பல நகரங்களும் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோனின் நகரங்களை அழித்ததுபோலவே அவற்றையும் அழித்தோம். எல்லா நகரங்களையும் அவற்றிலிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து ஜனங்களையும் அழித்தோம்.
7 ஆனால் அந்நகரங்களிலிருந்த எல்லாப் பசுக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் நமக்காக வைத்துகொண்டோம்.
8 "அவ்வாறு, இரண்டு எமோரிய அரசர்களின் நிலத்தைக் கைப்பற்றினோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் அந்நிலத்தைக் கைப்பற்றினோம்.
9 (சீதோனிலிருந்து வந்த ஜனங்கள் எர்மோன் மலையை சீரியோன் என்றழைத்தார்கள். ஆனால் எமோரியர்களோ அதை சேனீர் என்றழைத்தார்கள்.)
10 உயர்ந்த சமவெளியிலிருந்த எல்லா நகரங்களையும் கீலேயாத்தையும் நாம் எடுத்துக் கொண்டோம். சல்க்காயிதுவங்கி எத்ரேயி வரைக்கும் பாசானின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டோம். பாசானின் அரசன் ஓக்கின் ஆட்சியில் சல்க்காயிவும் எத்ரேயும் நகரங்களாயிருந்தன."
11 (பாசானின் அரசன் ஓக் அதுவரைக்கும் வாழ்ந்திருந்த மிகச்சில ரெபெய்தியர்களில் ஒருவன். ஓக்கின் படுக்கை இரும்பாலானது. அது 13 அடிக்கும் அதிக நீளமும் 6 அடி அகலமும் உடையது. அந்தப் படுக்கை அம்மோனிய ஜனங்கள் வசிக்கும் ரப்பா நகரில் இன்னமும் உள்ளது.)
12 "எனவே அந்நிலத்தை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டோம். ரூபன் மற்றும் காத் ஆகியோரின் கோத்திரத்திற்கு அந்நிலத்தின் பகுதியை நான் தந்தேன். நான் அவர்களுக்கு அர்னோன் பள்ளத்தாக்கின் ஆரோவேர் முதல் கீலேயாத் மலைநாடு வரைக்குமான நிலப்பகுதியை அதில் இருந்த நகரங்கள் உள்ளாகக் கொடுத்தேன். கீலேயாத் மலைநாட்டின் பாதி அவர்களுக்குக் கிடைத்தது.
13 கீலேயாத்தின் மற்றொரு பாதியையும் பாசான் முழுவதையும், மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த பாதிப்பேர்களுக்கு கொடுத்தேன்." (பாசான் ஓக்கின் ஒரு இராஜ்யம். பாசானின் ஒரு பகுதி அர்கோப் எனப்பட்டது. அது ரெப்பாயிம் நாடு என்றும் அழைக்கப்பட்டது.
14 அர்கோப் நிலப் பகுதி முழுவதையும் (பாசான்) மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் எடுத்துக் கொண்டான். கேசூரிய ஜனங்களும் மாகாத்திய ஜனங்களும் வசித்த எல்லை வரைக்கும் அந்நிலப் பகுதி பரவியிருந்தது. அதற்கு யாவீரின் பெயரிடப்பட்டது. ஆகவே இன்றைக்கும், ஜனங்கள் பாசானை யாவீரின் நகரங்கள் என்றழைக்கின்றனர்.)
15 "நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன்.
16 மேலும் கீலேயாத்திலிருந்துதுவங்கும் நிலப்பகுதியை ரூபன் கோத்திரத்திற்கும், காத் கோத்திரத்திற்கும் கொடுத்தேன். இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து யாப்போக் நதிவரைக்கும் உள்ளது. பள்ளத்தாக்கின் நடுப்பகுதி ஒரு எல்லை. யாப்போக் நதி அம்மோனிய ஜனங்களின் எல்லை.
17 பாலைவனத்தின் அருகில் உள்ள யோர்தான் நதி அவர்களின் மேற்கு எல்லை. இப்பகுதிக்கு வடக்கே கலிலேயாவும் தெற்கே சவக்கடலும் (உப்புக்கடல்) உள்ளன. இப்பகுதி கிழக்கிலுள்ள பிஸ்கா சிகரங்களின் கீழுள்ளது.
18 "அச்சமயம், நான் அந்தக் கோத்திரங்களுக்கு இக்கட்டளையைக் கொடுத்தேன். அதாவது, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிப்பதற்காக யோர்தான் நதியின் இப்பகுதியில் உள்ள நிலத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உங்களில் உள்ள போர் வீரர்கள் தம் ஆயுதங்களை ஏந்தி மற்றுமுள்ள பிற இஸ்ரவேல் கோத்திரங்கள் யோர்தான் நதியைக் கடக்க உதவி செய்ய வேண்டும்.
19 நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நகரங்களில் உங்கள் மனைவிகளும், சிறு குழந்தைகளும், ஆடுமாடுகளும், (உங்களிடம் ஏராளமான கால்நடைகள் இருப்பதை நான் அறிவேன்.) தங்கியிருக்க வேண்டும்.
20 ஆனால் உங்கள் உறவினரான மற்ற இஸ்ரவேலருக்கு கர்த்தர் யோர்தான் நதியின் மறுபுறம் வசிப்பதற்காக நிலங்களை வழங்கும் வரையிலும் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்களுக்குத் தந்ததைப் போலவே, கர்த்தர் அவர்களுக்கும் அங்கு அமைதியைத் தருகிறவரையிலும் அவர்களுக்கு உதவுங்கள். பின் நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நிலப் பகுதிக்கு நீங்கள் திரும்பி வரலாம்.’
21 "பிறகு நான் யோசுவாவிடம், ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் இவ்விரு அரசர்களுக்கும் செய்த அனைத்தையும் நீ பார்த்திருக்கிறாய். நீ நுழையும் எல்லா நாடுகளிலும் கர்த்தர் அவ்வாறே செய்வார்.
22 அந்நாட்டு அரசர்களைக் கண்டு நீ பயப்படாதே, ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்’ என்று கூறினேன்.
23 "பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன்.
24 நான், ‘கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது அடிமை. நீர் செய்யப் போகும் அற்புதமும் வல்லமையுமான செயல்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எனக்குக் காட்டியிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் செய்துள்ள மாபெரும் வல்லமை மிக்க செயல்களை செய்யத்தக்க வேறொரு தேவன் விண்ணுலகிலோ, பூமியிலோ இல்லை!
25 தயவுசெய்து என்னை யோர்தான் நதியைக் கடந்துசென்று, அதன் மறுபுறம் உள்ள நற்பகுதியைக் காணவிடும். அழகான மலைநாட்டினையும் லீபனோனையும் என்னைப் பார்க்கவிடும்’ என்று வேண்டினேன்.
26 "ஆனால் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்னிடம் கோபமாயிருந்தார். அவர் எனக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் என்னிடம், ‘போதும் நிறுத்து! இதைப்பற்றி மேலும் பேசாதே.
27 பிஸ்கா மலையின் மீது ஏறிச் செல். மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளில் பார், நீ இவற்றை உன் கண்களால் பார்க்கலாம். ஆனால் நீ ஒருபோதும் யோர்தான் நதியைக்கடக்க முடியாது.
28 நீ யோசுவாவிற்கு கட்டளைக் கொடுத்து, அவனை ஊக்கப்படுத்து, திடப்படுத்து! நீ அந்நாட்டைப் பார்க்கலாம், ஆனால் யோசுவாவே இஸ்ரவேலரை அங்கு வழிநடத்திச் செல்வான். அவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றவும், அங்கு வாழவும் யோசுவா உதவுவான்’ என்று கூறினார்.
29 பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்."

Deuteronomy 3:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×