Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Daniel Chapters

Daniel 8 Verses

Bible Versions

Books

Daniel Chapters

Daniel 8 Verses

1 பெல்ஷாத்சாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இது முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப் பிறகு உள்ளது.
2 இந்த தரிசனத்தில் நான் சூசான் என்ற நகரத்தில் இருந்தேன். சூசான் என்பது ஏலாம் என்னும் மாநிலத்தின் தலைநகரம். நான் ஊலாய் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன்.
3 நான் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன். ஒரு செம்மறியாட்டுக்கடா ஊலாய் ஆற்றின் கரையில் நிற்பதை நான் பார்த்தேன். அந்த ஆட்டுக்கடாவிற்கு இரண்டு நீண்ட கொம்புகள் இருந்தன. ஒன்று இன்னொன்றைவிட நீளமானது. ஒரு கொம்பு இன்னொன்றைவிட பின்னாலிருந்தது.
4 அந்த செம்மறியாட்டுக்கடா தனது கொம்புகளோடு பாய்ந்ததைப் பார்த்தேன். அந்த ஆட்டுக் கடா மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடியதை நான் கவனித்தேன். எந்த மிருகத்தினாலும் இதனைத் தடுக்க முடியவில்லை. மற்ற மிருகங்களை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆட்டுக்கடாவால் தன் விருப்பம்போல் செய்ய முடிந்தது. எனவே ஆட்டுக்கடா வல்லமை பெற்றது.
5 நான் செம்மறியாட்டுக்கடாவைப்பற்றி நினைத்தேன். நான் நினைத்துகொண்டிருக்கும்போது மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வருவதைப் பார்த்தேன். வெள்ளாட்டுக்கடாவிற்கு எளிதில் பார்க்கும் வகையில் ஒரு பெரிய கொம்பு இருந்தது. அந்த வெள்ளாடு பூமி முழுவதும் ஓடியது. இந்த வெள்ளாட்டுக்கடாவின் கால்கள் தரையில்படவேயில்லை.
6 அந்த வெள்ளாட்டுக்கடா 2 கொம்புகளையுடைய செம்மறியாட்டுக்கடாவிடம் வந்தது. இந்த ஆட்டுகடாதான் நான் ஊலாய் ஆற்றின் கரையில் பார்த்தது. வெள்ளாட்டுக் கடா கோபமாக இருந்தது. இது செம்மறி ஆட்டுக்கடாவை நோக்கி ஓடியது.
7 வெள்ளாட்டுக்கடா கோபமாக இருந்தது. இது செம்மறியாட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளையும் ஒடித்தது. செம்மறியாட்டுக்கடாவால் வெள்ளாட்டுக் கடாவைத் தடுக்கமுடியவில்லை. வெள்ளாட்டுக்கடா, செம்மறியாட்டுக்கடாவைத் தரையில் வீழ்த்தியது. பிறகு வெள்ளாட்டுக்கடா செம்மறியாட்டுக்கடாவின்மேல் மிதித்தது. வெள்ளாட்டுக் கடாவிடமிருந்து செம்மறியாட்டுக்கடாவைக் காப்பாற்ற அங்கே யாருமில்லை.
8 எனவே வெள்ளாட்டுக்கடா மிகவும் வல்லமை பெற்றது. ஆனால் அது வல்லமை உடையதாக இருக்கும்போதே அதன் ஒரு பெரிய கொம்பு உடைந்தது. அந்த ஒரு கொம்பிருந்த இடத்தில் நான்கு கொம்புகள் வளர்ந்தன. அந்த நான்கு கொம்புகளும் எளிதில் பார்க்கும்படியாக இருந்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு வெவ்வேறு திசைகளையும் பார்ப்பதாக இருந்தன.
9 பிறகு நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து ஒரு சிறியக் கொம்பு முளைத்தது. அந்தச் சிறியக் கொம்பு வளர்ந்து பெரிய கொம்பாக மாறியது. இது தென் கிழக்கை நோக்கி வளர்ந்தது. இது அழகான தேசத்தை நோக்கி வளர்ந்தது.
10 அந்தச் சிறியக் கொம்பு மிகப் பெரியதாயிற்று. அது வானத்தை தொடும்வரை வளர்ந்தது. இந்த சிறியக் கொம்பு வானத்தின் நட்சத்திரங்கள் சிலவற்றையும் தரையிலே வீழ்த்தியது. இது அந்த நட்சத்திரங்கள் மீது மிதித்து நடந்தது.
11 அந்தச் சிறியக் கொம்பு மிகவும் வல்லமை உடையதாகியது. பிறகு இது நட்சத்திரங்களை ஆள்பவருக்கு (தேவன்) எதிராகத் திரும்பியது. இந்த சிறியக் கொம்பு ஆளுபவருக்கு (தேவன்) அளிக்கப்படும் தினப்பலியைத் தடுத்தது. ஆளுபவரை தொழுவதற்கு ஜனங்கள் கூடும் இடம் இடித்துத் தள்ளப்பட்டது.
12 சிறியக் கொம்பு பாவம் செய்து தினப்பலியை நிறுத்தியது. இது சத்தியத்தை தரையிலே வீசியது. சிறியக் கொம்பு இவற்றைச் செய்து வெற்றிகரமாக விளங்கியது.
13 பிறகு நான் பரிசுத்தமான ஒருவர் பேசுவதைக் கேட்டேன். பிறகு இன்னொரு பரிசுத்தமானவர் முதலாமவருக்குப் பதில் சொல்வதைக் கேட்டேன். முதலாம் பரிசுத்தமானவர்: "இந்தத் தரிசனமானது தினபலி எவ்வாறு ஆகும் என்பதைக் காட்டுகிறது. இது அழிவுக்குண்டான பயங்கரமான பாவத்தைப் பற்றியது. இது, ஆளுபவரை தொழுதுகொள்ளும் இடத்தை அழித்தால் என்ன ஏற்படும் என்பதையும் காட்டுகிறது. அந்த ஜனங்கள் அந்த இடம் முழுவதையும், அந்த நட்சத்திரங்களையும் மிதிக்கும்போது என்ன நிகழும் என்பதையும் இது காட்டுகிறது. ஆனால் இவையெல்லாம் இன்னும் எவ்வளவு காலம் நடக்கும்?" என்றார்.
14 இன்னொரு பரிசுத்தமானவர்: "இது 2,300 நாட்களுக்கு நடக்கும் பிறகு பரிசுத்தமான இடமானது சுத்திகரிக்கப்படும்" என்றார்.
15 தானியேலாகிய நான், இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இதன் பொருள் என்னவென்று புரிந்துகொள்ள முயன்றேன். நான் தரிசனத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது, மனிதனைப்போன்று தோன்றியவர் திடீரென்று என் முன் எழுந்து நின்றார்.
16 பிறகு நான் மனிதனின் குரலைக் கேட்டேன். இந்தக்குரல் ஊலாய் ஆற்றக்கு மேலிருந்து வந்தது. இந்தக்குரல், "காபிரியேலே, இந்த மனிதனிடம் தரிசனத்தை விளக்கு" என்றது.
17 எனவே மனிதனைப்போன்று தோன்றிய காபிரியேல் தேவதூதன், என்னிடம் வந்தான். நான் மிகவும் பயந்து தரையில் விழுந்தேன். ஆனால் காபிரியேல் என்னிடம், "மனிதனே, இந்த தரிசனமானது முடிவு காலத்தைக் குறித்தது" என்றான்.
18 காபிரியேல் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தரையில் விழுந்து தூங்கிவிட்டேன். அது ஆழ்ந்த உறக்கம். பிறகு காபிரியேல் என்னைத் தொட்டு நிற்கும்படியாகத் தூக்கிவிட்டான்.
19 காபிரியேல், "இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது.
20 நீ இரண்டு கொம்புள்ள செம்மறியாட்டுக்கடாவைப் பார்த்தாய். அக்கொம்புகள் மேதியா, பெர்சியா எனும் தேசங்களாகும்.
21 வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் அரசன். இரண்டு கண்களுக்கு மத்தியில் முளைத்த கொம்பானது முதல் அரசனாகும்.
22 அந்தக் கொம்பு உடைந்தது. அந்த இடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு இராஜ்யங்களாகும். அந்த நான்கு இராஜ்யங்களும் முதல் அரசனின் தேசத்திலிருந்து வரும். ஆனால் அந்த நான்கு தேசங்களும் முதல் அரசனைப் போன்று அவ்வளவு பலமுடையதாக இல்லை.
23 அந்த இராஜ்யங்களுக்கு முடிவு நெருங்கும்போது, அங்கு தைரியமும் கொடுமையும் வாய்ந்த ஒரு அரசன் தோன்றுவான். இந்த அரசன் மிகவும் தந்திரசாலியாக இருப்பான். ஏராளமாக மேலும் மேலும் ஜனங்கள் பாவம் செய்யும்போது இது நிகழும்.
24 இந்த அரசன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான். ஆனால் இந்த வல்லமை இவனிடத்திலிருந்து வருவதாக இருக்காது. இந்த அரசன் பயங்கரமான அழிவுக்குக் காரணமாக இருப்பான். அவன் செய்கிற எல்லாவற்றிலும் வெற்றிகரமாக விளங்குவான். அவன் வல்லமைமிக்க ஜனங்களையும் தேவனுடைய விசேஷ ஜனங்களையும் அழிப்பான்.
25 இந்த அரசன் மிகவும் உபாயமும் தந்திரமும் உடையவனாக இருப்பான். அவன் வெற்றி பெறுவதற்காகத் தனது ஞானத்தையும், பொய்களையும் பயன்படுத்துவான். அவன் தன்னை மிகவும் முக்கிய மானவன் என்று நினைப்பான். அவன் பல ஜனங்களை அவர்கள் எதிர்பார்திராத நேரத்தில் அழிப்பான். அவன் அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியானவரோடு (தேவன்) போரிட முயற்சி செய்வான். ஆனால் கொடுமையான அரசனின் வல்லமை அழிக்கப்படும். அவனை அழிக்கப்போவது மனிதக் கைகளாக இருக்காது.
26 அந்தக் காலங்களைப்பற்றிய தரிசனமும் நான் சொன்னவையும் உண்மையானவை. ஆனால் தரிசனத்தை நீ முத்திரையிட்டு வை. அதற்கு இன்னும் அநேக காலம் ஆகும் என்றான்.
27 தானியேலாகிய நான் மிகவும் பலவீனனாகிவிட்டேன். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு பல நாட்கள் நான் நோயுற்றேன். பிறகு நான் எழுந்து அரசனுக்காக வேலை செய்யப்போனேன். ஆனால் நான் அந்தத் தரிசனத்தால் கலங்கிக்கொண்டிருந்தேன். தரிசனத்தின் பொருள் என்னவென்று நான் புரியாமல் இருந்தேன்.

Daniel 8:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×