எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “1,000 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள், 100 ஆட்களோடு திரும்பி வருவார்கள், 100 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்.”
கர்த்தரிடம் போய் வாழுங்கள். நீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும். அந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும். பெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது.
(7-9) நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும். தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார். அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார். அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார். அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார். அவரது நாமம் யேகோவா. அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.” நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள். நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள்.
நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள். நீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள். நீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள். ஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள். நீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள்.
ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன். நீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் நேர்மையானவர்களைப் புண்படுத்துகிறீர்கள். நீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள். நீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை.
நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள். எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும். அப்போது நீங்கள் வாழ்வீர்கள். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார்.
தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள். வழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள். பிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் யோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார்.
உங்களில் சிலர் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய நாளைப்பார்க்க விரும்புகிறீர்கள். நீங்கள் அந்நாளை ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்? கர்த்தருடைய அந்தச் சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தையே கொண்டு வரும்.
நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன், கரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள். நீங்கள், ஒருவன் பாதுகாப்பிற்காகத் தன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது. பாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள்.
கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும். அந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும். அந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத அந்தகாரமான நாளாயிருக்கும்.
நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் தரும் சமாதான பலியில் உள்ள கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூடமாட்டேன்.