English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Chronicles Chapters

2 Chronicles 24 Verses

1 யோவாஸ் அரசனானபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள்.
2 யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான்.
3 யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தனர்.
4 பின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான்.
5 யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை.
6 எனவே, அரசன் தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் அரசன், “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான்.
7 முற்காலத்தில் அத்தாலியாளின் மகன்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண்.
8 ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் அரசன் கட்டளையிட்டான்.
9 பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும்.
10 அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர்.
11 பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள்.
12 பிறகு யோவாஸ் அரசனும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திற மைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள்.
13 வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள்.
14 எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை அரசனிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர்.
15 யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது.
16 யோய்தாவை தாவீதின் நகரத்திலே அரசர்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர்.
17 யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் அரசன் யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை அரசன் கவனித்தான்.
18 அரசனும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். அரசனும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார்.
19 தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர்.
20 தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’ ” என்றான்.
21 ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி அரசன் கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர்.
22 யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் அரசன் நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் மகனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.
23 ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு அரசனுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர்.
24 மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான்.
25 ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் மகனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை.
26 யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள்.
27 யோவாசின் மகன்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் அரசர்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய அரசனானான். அமத்சியா யோவாசின் மகன்.
×

Alert

×