ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், இவர்கள் தம் பெற்றோர்களுக்கு உதவுவதன் மூலம் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதை முதலில் கற்கவேண்டும். இவர்கள் இதைச் செய்தால் பெற்றோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் நன்றிக் கடன் செலுத்தியவர்களாவார்கள். இதையே தேவன் ஒப்புக்கொள்கிறார்.
ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.
நல்ல காரியங்களைச் செய்யும் ஒரு பெண் என அறியப்பட்டிருக்க வேண்டும். அதாவது பிள்ளைகளை வளர்த்தல், வீட்டில் அந்நியர்களை உபசரித்தல், தூயவர்களின் கால்களைக் கழுவுதல், துன்பப்படுகிறவர்களுக்குத் துணை புரிதல் போன்று தன் வாழ்க்கை முழுவதும் பலவித நன்மைகளைச் செய்தல் வேண்டும்.
அந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்க்காதீர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குத் தம்மை ஒப்படைத்தாலும், பலமான காம ஆசைகளால் அவரை விட்டு வெளியே இழுக்கப்படுவர். அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பலாம்.
இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள்.
ஆகையால் இளம் விதவைகள் மீண்டும் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வீட்டைக் கவனித்துக்கொள்வார்களாக. இதுவே அவர்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த வழியில் அவர்கள் எதிரிக்கு விமர்சிக்கும் வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள்.
விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும்.
சபைகளை நன்றாக நடத்திச்செல்லும் மூப்பர்கள் தக்க கௌரவம் பெற வேண்டும். பேசுவதன் மூலமும், போதிப்பதன்மூலம் உழைப்பவர்களாய் இருப்பவர்களே அத்தகு கௌரவத்தைப் பெறுவர்.
ஏனென்றால், “பிணையல் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே. அது உண்ணட்டும்” [✡உபா. 25:4-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று வேதவாக்கியம் கூறுகிறது. “உழைக்கிறவனுக்கு அதற்கேற்ற கூலி கொடுக்கப்படவேண்டும்” [✡லூக்கா 10:7-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்றும் கூறுகிறது.
தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ தூதர்களுக்கும் முன்பாக இவற்றை நீ செய்யவேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். பாரபட்சத்தோடு ஒன்றும் செய்யாதே. அதைப்பற்றி ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளும் முன்பு முடிவு செய்யாதே.
தீமோத்தேயுவே! நீ இதுவரை தண்ணீரையே குடித்து வந்தாய். அதை நிறுத்தி கொஞ்சம் திராட்சை இரசமும் குடி. அது உன் வயிற்றுக்கு நல்லது. உனக்கு அடிக்கடி வரும் வியாதியில் உனக்கு இது உதவக் கூடும்.
சிலரது பாவங்கள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்படியாக இருக்கும். அவர்கள் நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்பதை அவர்கள் பாவங்களே காட்டுகின்றன. ஆனால் சிலரது பாவங்களோ தாமதமாகவே வெளிப்படும்.