உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன்.
ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள்.
இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும். “அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர். ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.” நீதிமொழிகள் 3:34
உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். பிசாசைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள்.
உங்கள் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நீங்கள் அனுபவிக்கிற அதே துன்பங்களை உலகத்தின் எல்லா பாகங்களிலுமுள்ள உங்கள் சகோதரரும் சகோதரிகளும் அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆம், குறுகிய காலம் நீங்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகு, தேவன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார். அவர் உங்களை பலப்படுத்துவார். அவர் உங்களைத் தாங்கிக்கொண்டு, நீங்கள் விழாதபடி பாதுகாப்பார். எல்லா கிருபையையும் அருளுகின்ற தேவன் அவரே. கிறிஸ்துவின் மகிமையில் பங்குகொள்ளும்படி அவர் உங்களை அழைத்தார். அம்மகிமை என்றென்றும் தொடரும்.
சில்வானுவின் உதவியோடு இந்தச் சிறிய நிருபத்தை உங்களுக்கு எழுதினேன். அவன் நம்பிக்கைக்குத் தகுதியான கிறிஸ்தவ சகோதரன் என்பதை நான் அறிவேன். உங்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு உறுதிப்படுத்தவும், இதுவே தேவனுடைய உண்மையான கிருபை என்பதை எழுதி இருக்கிறேன். அந்தக் கிருபையில் உறுதியாக நில்லுங்கள்.
பாபிலோனில் இருக்கும் சபை உங்களை வாழ்த்துகிறது. அம்மக்களும் உங்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவில் எனது மகனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறான்.