Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

1 Kings Chapters

1 Kings 18 Verses

Bible Versions

Books

1 Kings Chapters

1 Kings 18 Verses

1 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம் "போய் ஆகாப் அரசனைப் பார். நான் மழையை அனுப்புவேன்" என்றார்.
2 எனவே எலியா ஆகாப்பை சந்திக்கச் சென்றான். அப்போது, சமாரியாவில் உணவே இல்லை.
3 எனவே அரசன் அரண்மனை விசாரிப்புக்காரனான ஒபதியாவைத் தன்னிடம் வரவழைத்தான். (காரணம் ஒபதியா உண்மையான கர்த்தருடைய ஊழியன்.
4 ஒருமுறை யேசபேல் கர்த்தருடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்றாள். எனவே ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை 2 குகைகளில் ஒளித்து வைத்தான். ஒவ்வொன்றிலும் 50 பேரை வைத்தான். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தான்.)
5 அரசன் ஒபதியாவிடம், "இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்" என்றான்.
6 நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள்.
7 ஒபதியா, எலியாவை சந்தித்தான். எலியாவைப் பணிந்து வணங்கினான். அவன், "எலியா? எஜமானரே! உண்மையில் நீங்கள் தானா? " என்று கேட்டான்.
8 அதற்கு எலியா, "ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் அரசனிடம் கூறு" என்றான்.
9 பிறகு ஒபதியா, "நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் அரசனிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்?
10 தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். அரசன் உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு அரசனிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்!
11 நான் அரசனிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால்
12 பிறகு, கர்த்தருடைய ஆவி உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்குத் தூக்கிச் செல்லும். பிறகு, அரசன் உங்களைக் காணாமல் என்னைக் கொல்வான்! நான் சிறுவயது முதலே கர்த்தரைப் பின்பற்றி வருகிறேன்.
13 நான் செய்ததை நீங்கள் அறிவீர்! யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றபோது நான் 100 தீர்க்கதரிசிகளை அழைத்துப் போய் 50 பேர் வீதம் இரண்டு குகைகளில் ஒளித்து வைத்தேன். உணவு கொடுத்து காப்பாற்றினேன்.
14 இப்போது நீர் இங்கிருப்பதாக அரசனிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!" என்றான்.
15 எலியாவோ, "சர்வவல்லமையுள்ள கர்த்தர் உறுதியாக வாழ்வதுபோல, நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று நான் அரசன் முன்பு நிற்பேன்" என்றான்.
16 எனவே ஒபதியா அரசனிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். அரசனும் எலியாவைப் பார்க்க வந்தான்.
17 அரசன் எலியாவைப் பார்த்ததும், "இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?" என்று கேட்டான்.
18 அதற்கு எலியா, "இஸ்ரவேலின் துன்பத்திற்கு நான் காரணம் அல்ல. நீயும் உன் தந்தையின் குடும்பமும்தான் காரணம், நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பொய்தெய்வங்களை பின்பற்றினீர்கள்.
19 இப்போது, அனைத்து இஸ்ரவேலர்களும் என்னை கர்மேல் மலையில் சந்திக்கும்படி கூறுங்கள். பாகாலின் 450 தீர்க்கதரிசிகளும் வரட்டும். ஆஷரா பொய்த்தேவதை அரசியின் ஆதரவு பெற்ற 400 தீர்க்கதரிசிகளும் வரட்டும். இந்த தீர்க்கதரிசிகள் அரசி யேசபேலின் உதவிபெற்றவர்கள்" என்றான்.
20 எனவே ஆகாப் அனைத்து இஸ்ரவேலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரவழைத்தான்.
21 எலியா அங்கு வந்து, "யாரை பின்பற்றுவது என்று எப்பொழுது முடிவு செய்வீர்கள்? கர்த்தர் உண்மையான தேவன் என்றால், அவரைப் பின்பற்றவேண்டும். பாகால்தான் உண்மையான தேவன் என்றால், அவனைப் பின்பற்றவேண்டும்!" என்றான். ஜனங்கள் எதுவும் கூறவில்லை.
22 எனவே எலியா, "நான் இங்கு கர்த்தருடைய ஒரே தீர்க்கதரிசி. நான் தனியாக இருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு 450 தீர்க்கதரிசிகள் உள்ளனர்.
23 எனவே இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் அதை கொன்று துண்டு துண்டாக வெட்டி விறகின்மேல் வைக்கட்டும். ஆனால் அதை எரிக்க வேண்டாம் பிறகு மற்ற காளையை நான் அப்படியே செய்வேன். நான் நெருப்பு எரிக்கத் தொடங்கமாட்டேன்.
24 பாகால் தீர்க்கதரிசிகளே, நீங்கள் உங்கள் தெய்வத்தை நோக்கி ஜெபியுங்கள். நான் என் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன். அந்த ஜெபத்திற்கு செவிசாய்த்து விறகுகளைத்தானாக எரிய வைக்கிறவரே உண்மையான தேவன்" என்றான். இது நல்ல திட்டம் என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
25 எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், "நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்" என்றான்.
26 அவர்களும் அவ்வாறே செய்தனர். மதியம்வரை, பாகாலிடம் ஜெபித்தனர். "பாகால் எங்களுக்கு பதில் கூறும்!" என்றனர். சத்தமில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் பலிபீடத்தைச் சுற்றி ஆடினார்கள். நெருப்பு பற்றவில்லை.
27 எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், "உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!" என்று கூறினான்.
28 அவர்களும் சத்தமாக ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை வாளாலும் ஈட்டியாலும் காயப்படுத்திகொண்டனர். இது ஒருவகையான தொழுதுகொள்ளுதல். இரத்தம் கொட்டும்வரை இவ்வாறு செய்தனர்.
29 மதியமும் போனது. நெருப்பு பற்றவில்லை. மாலைவரை வேண்டுதல்செய்தனர். எதுவும் நடக்கவில்லை. பாகாலிடமிருந்து பதிலும் வரவில்லை. எந்த ஓசையும் இல்லை. யாரும் கவனிக்கவில்லை!
30 இப்போது எலியா ஜனங்களிடம், "இப்போது என்னிடம் வாருங்கள்" என்று கூப்பிட ஜனங்கள் அவனைச் சுற்றிக் கூடினார்கள். உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான்.
31 எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 மகன்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார்.
32 எலியா பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதைச்சுற்றிலும் குழி அமைத்தான். 7 கலன் தண்ணீர் பிடிக்குமாறு அக்குழி இருந்தது.
33 பின் பலிபீடத்தில் விறகை வைத்து, காளையைத் துண்டுகளாக்கி மேலே வைத்தான்.
34 எலியா, "ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்" என்று சொன்னான். அவன், "மீண்டும் செய்க" என்றான். பிறகு அவன், "மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்" என்று சொன்னான்.
35 அந்த தண்ணீர் வடிந்து பலி பீடத்தைச் சுற்றிய குழியில் நிரம்பியது
36 இது மாலை பலிக்கான நேரம். எனவே பலிபீடத்தின் அருகில் எலியா சென்று, ஜெபம் செய்தான். "கர்த்தாவே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவனே, நீர்தான் இஸ்ரவேலின் தேவன் என்பதை நிரூபியும் என்று நான் இப்போது உம்மைக் கேட்கிறேன். நான் உம்முடைய ஊழியன் என்பதையும் நிரூபியும், நீர்தான் இவற்றை செய்ய கட்டளையிட்டுள்ளீர் என்பதைக் காட்டும்.
37 கர்த்தாவே! என் ஜெபத்திற்கு பதில் சொல்லும். பிறகு அவர்கள் கர்த்தாவே நீர்தான் தேவன், என்று அறிவார்கள். நீர் அவர்களது இதயங்களை மீண்டும் திருப்பிக்கொண்டிருக்கிறீர்" என்றான்.
38 எனவே கர்த்தர் நெருப்பை அனுப்பினார். மாமிசம், விறகு, பலிபீடம், பலீபீடத்தைச் சுற்றிய இடமும் பற்றி எரிந்தது. தண்ணீரும் வற்றியது
39 அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, "கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்" என்றனர்.
40 பிறகு எலியா, "பாகாலின் தீர்க்கதரிசிகளைத் தப்பிவிடாதபடி பிடியுங்கள்!" என்றான். ஜனங்கள் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் அனைவரையும் கீசோன் என்ற இடத்தில் கொன்றனர்.
41 எலியா ஆகாப் அரசனிடம், "போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது" என்றான்.
42 எனவே ஆகாப் உணவு உண்ணப்போனான். பிறகு, எலியா கர்மேல் மலையின் உச்சியில் ஏறி, குனிந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்து,
43 தன் வேலைக்காரனிடம், "கடலைப்பார்" என்றான். வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, "எதையும் காணவில்லை" என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல,
44 ஏழாவது முறை வேலைக்காரன், "மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்" என்றான். எலியா அவனிடம், "ஆகாப் அரசனிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைதடுத்துவிடும்" என்றான்.
45 சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
46 கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக்கட்டிக்கொண்டு அரசனுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.

1-Kings 18:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×