அந்த தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.
அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.
கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.
நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப் போய்விட்டதே! அதின் வழியாய்ப் போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.