இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள்.
ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.
நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.
எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்தநாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நிமயங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.