கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?
நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வெறொருவர் இல்லை.
நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.