ஏனெனில் இதோ, நாட்கள் வரும்; நம் மக்களாகிய இஸ்ராயேலுக்கும் யூதாவுக்கும் மீண்டும் முன்பு போல வளவாழ்வு தருவோம், என்கிறார் ஆண்டவர்; அவர்களுடைய முன்னோர்க்கு நாம் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்ப அழைத்து வருவோம்; அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்."
ஆண் மகன் எவனாவது பிள்ளை பெறுவதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; இல்லையெனில், ஆண்கள் யாவரும் பிரசவிக்கும் பெண்களைப் போல, தங்கள் இடையில் கை வைத்திருப்பானேன்? எல்லா முகமும் வெளுத்துப் போயிருப்பதேன்?
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் அவன் கழுத்தில் இருக்கும் நுகத்தடியை அவன் கழுத்தினின்று எடுத்து முறிப்போம்; அவனுடைய விலங்குகளைத் தறிப்போம்; இனி அந்நியர் அவனை ஆளமாட்டார்கள்.
ஆதலால், நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, பயப்படாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் இதோ, நம் தொலைநாட்டினின்று உன்னை மீட்போம்; உன் சந்ததியையும் அடிமைத் தனத்தினின்று விடுவிப்போம்; அப்போது யாக்கோபு திரும்பி வந்து இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துபவனோ ஒருவனுமிரான்.
ஏனெனில் உன்னை மீட்க நாம் உன்னோடு இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்: எந்த மக்கள் நடுவில் நீ சிதறடிக்கப்பட்டு வாழ்ந்தாயோ, அந்த மக்கள் அனைவரையும் நாம் முற்றிலும் அழிப்போம்; ஆனால் உன்னை நாம் முற்றிலும் அழிக்கமாட்டோம்; நீதியான அளவில் உன்னைத் தண்டிப்போம், முற்றிலுமே உன்னை தண்டிக்காமல் விட மாட்டோம்.
உன் காதலர்கள் அனைவரும் உன்னை மறந்து விட்டார்கள்; அவர்கள் உன்னைத் தேடுகிறதே இல்லை; நாமோ மாற்றானைத் தாக்குவது போல் உன்னைத் தாக்கினோம்; இரக்கமற்ற பகைவனைப் போலத் தண்டித்தோம்; ஏனெனில் உன் அக்கிரமம் மிகப்பெரியது; உன் பாவங்கள் மிக மோசமானவை.
நீ நசிந்து போனதாய் ஏன் கூவுகிறாய்? உன் நோய் தீருவது இயலாத ஒன்று; ஏனெனில் உன் அக்கிரமம் மிகப்பெரியது; உன் பாவங்கள் மிக மோசமானவை. எனவே தான் இவற்றையெல்லாம் செய்தோம்.
ஆதலால் உன்னை விழுங்குகிறவர்கள் விழுங்கப்படுவார்கள்; உன் பகைவர் அனைவரும் அடிமைகளாய் அழைத்துப் போகப் படுவார்கள்; உன்னை அழிக்கிறவர்கள் அழிக்கப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையடிப்பவர்களை நாம் கொள்ளைப் பொருளாக்குவோம்.
மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்: நாம் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்ப நிலை நாட்டுவோம்; அவன் வீடுகளின் மீது இரக்கம் காட்டுவோம்; நகரம் தன் மலையின் மேல் மீண்டும் கட்டப்படும்; அரண்மனையும் முன்னிருந்த இடத்தில் அமைக்கப்படும்;
அவர்களிடமிருந்து நன்றிக் கீதங்கள் எழும்பி வரும்; மகிழ்ச்சி கொண்டாடுவோரின் குரல்கள் கேட்கும்; நாம் அவர்களைப் பலுகச் செய்வோம்; அவர்கள் எண்ணிக்கையில் குறையமாட்டார்கள்; நாம் அவர்களை மகிமைப்படுத்துவோம்; இனி அவர்கள் சிறுமையடைய மாட்டார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் முன்னாளில் இருந்தது போலவே இருப்பார்கள்; அவர்களுடைய சபை நம் முன்னிலையில் நிலைநாட்டப்படும்; அவர்களைத் துன்புறுத்துவோர் அனைவரையும் தண்டிப்போம்.
அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆளுபவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் நம்மை அணுகும்படி செய்வோம்; அவனும் நம்மை அணுகி வருவான்; ஏனெனில் தானாகவே நம்மை அணுகி வரத் துணிபவன் எவன்? என்கிறான் ஆண்டவர்.
ஆண்டவரின் கடுங்கோபம், அவர் மனதில் நினைத்திருக்கும் எண்ணங்களையெல்லாம் செய்து முடித்து நிறைவேற்றாத வரையில், திரும்பாது; கடைசி நாளில் இதைக் கண்டுணர்வீர்கள்.