தீவுகளே, செவிகொடுத்துக் கேளுங்கள், தொலை நாட்டவரே, கூர்ந்து கவனியுங்கள்: கருப்பையிலேயே ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார், என் தாய் வயிற்றிலேயே எனக்குப் பெயரிட்டிருக்கிறார்.
அதற்கு நான்: "பயனின்றி வீணாக உழைத்துச் சோர்ந்தேன், என் ஆற்றலைப் பயனின்றிச் செலவழித்தேன்; ஆயினும் என் நியாயம் ஆண்டவரின் பொறுப்பு, எனக்குரிய கைம்மாறு கடவுளிடம் உள்ளது" என்றேன்.
யாக்கோபைத் தம்மிடம் அழைத்து வர, இஸ்ராயேலைத் தம்மிடம் கூட்டி வர, என்னைத் தம் ஊழியனாய் என் தாய் வயிற்றில், உருவாக்கிய ஆண்டவர் கூறுகிறர்; ஏனெனில் ஆண்டவர் திரு முன் நான் மகிமையடைந்தேன், என் கடவுள் என்னுடைய வலிமை ஆனார்.
அவர் சொன்னார்: "யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ராயேலில் எஞ்சினோரைத் திருப்பிக் கொணரவும், நமக்கு நீ ஊழியனாய் இருத்தல் பெரிதன்று. உலகத்தின் எல்லை வரையில் நமது மீட்பு எட்டும் படி, புறவினத்தார்க்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினோம்."
மனிதரால் நிந்தித்துப் புறக்கணிக்கப்பட்டுப் புறவினத்தாரால் அருவருத்துத் தள்ளப்பட்டவனும், மன்னர்களுக்கு ஊழியனுமானவனுக்கு இஸ்ராயேலின் மீட்பரும், அதன் பரிசுத்தருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "பிரமாணிக்கமுள்ள ஆண்டவரை" முன்னிட்டும், உன்னைத் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பரிசுத்தரை முன்னிட்டும், அரசர்கள் உன்னைக் கண்டு எழுந்திருப்பார்கள், தலைவர்கள் உன் முன் விழுந்து வணங்குவார்கள்."
ஆண்டவர் கூறுகிறார்: "உகந்த காலத்தில் உன் மன்றாட்டைக் கேட்டருள்வோம், மீட்பின் நாளில் உனக்கு உதவி புரிவோம்; உன்னைக் காத்தோம், மக்களுக்கு உடன்படிக்கையாய் உன்னை ஏற்படுத்தினோம்; உலகத்திற்குப் புத்துயிர் தரவும், சிதறுண்ட உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும்,
விலங்கிடப்பட்டவர்களைப் பார்த்து, 'வெளியே வாருங்கள்' என்று சொல்லவும், இருளில் இருப்பவர்களை நோக்கி, 'வெளிச்சத்திற்கு வாருங்கள்' என்று சொல்லவும் ஏற்படுத்துவோம். அப்போது வழிகளில் தாராளமாய் நம் ஆடுகள் மேயும், எல்லாச் சமவெளிகளிலும் அவை மேய்ச்சலைக் காணும்.
பசி தாகத்தால் அவை வருந்தமாட்டா, வெப்பமும் வெயிலும் அவற்றைத் தாக்கமாட்டா; ஏனெனில் அவற்றின் மேல் இரக்கமுள்ளவர் அவற்றைக் கண்காணித்து நடத்துவார்; நீரூற்றுகளுக்கு அவற்றைக் கூட்டிச் செல்வார்.
பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ? பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ? அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்து விட்டாலும், நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டோம்!
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; - நம் உயிர் மேல் ஆணை! என்கிறார் ஆண்டவர் - இவர்களெல்லாம் உனக்கு அணிகலனாய் இருப்பார்கள், மணப்பெண் போல் இவர்களால் உன்னை அழகு செய்வாய்.
கைவிடப்பட்டவளாய் நீ இருந்த போது உனக்குப் பிறந்தவர்கள் உன்னிடத்தில் காதோடு காதாய் 'எனக்கு இடம் நெருக்கமாய் இருக்கிறது, குடியிருக்க எனக்கு இட வசதி செய்' என்பார்கள்.
அப்போது நீ உன் இதயத்தில் சொல்வாய்: 'எனக்கு இந்தப் பிள்ளைகளைப் பெற்று கொடுத்தது யார்? நான் மலடியாயும் பிள்ளை பெறாதவளாயும் இருந்தேன், நாடு கடத்தப்பட்டு அடிமையாய் இருந்தேன், இவர்களை வளர்த்து வந்தது யார்? நானோ திக்கற்றவளாயும் தனியளாயும் இருந்தேன், இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்"
கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, புறவினத்தாரை நோக்கி நமது கையை நீட்டுவோம், மக்களினங்களுக்கு நம் கொடியை உயர்த்திக் காட்டுவோம்; அவர்கள் உன் புதல்வர்களைக் கைகளிலேந்திக் கொணர்வார்கள், உன் புதல்வியரைத் தோளின் மேல் தூக்கி வருவார்கள்.
அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர்களாயும், அரசிகள் உன் செவிலித் தாயாராகவும் இருப்பர்; முகம் தரையில் படிய உன்னை விழுந்து வணங்குவர், அவர்கள் உன் காலடியில் கிடப்பார்கள். அப்போது, நாமே ஆண்டவர் என்பதையும், நமக்காகக் காத்திருப்போர் அவமானமடையார் என்பதையும் நீ அறிந்து கொள்வாய்."
ஆனால் ஆண்டவர் கூறுகிறார்: "வல்லவனிடம் சிறைப்பட்டவர்கள் கூடப் பறிக்கப்படுவர், வெற்றி வீரனிடமிருந்து கொள்ளைப்பொருள் தப்புவிக்கப்படும். ஏனெனில் உன்னுடன் போராடுகிறவர்களோடு நாமும் போராடுவோம், உன்னுடைய மக்களை நாம் திண்ணமாய் மீட்போம்.
உன் எதிரிகள் தங்கள் சதையையே பிடுங்கித் தின்னும்படி செய்வோம்; சொந்த இரத்தத்தையே புது இரசம் போலக் குடித்து வெறியேறும்படி செய்வோம்; அப்போது, எல்லா மனிதர்களும் உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவர் என்பதையும் அறிந்து கொள்வர்."