நாம் இஸ்ராயேலைக் குணமாக்க வரும் போது, எப்பிராயீம் அக்கிரமம் வெளியாகும், சமாரியாவின் தீச்செயல்கள் புலனாகும். ஏனெனில் அவர்கள் வஞ்சகம் செய்கிறார்கள், திருடர்கள் உள்ளே நுழைகிறார்கள், கொள்ளைக் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.
அவர்களுடைய தீச்செயல்களை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம் என அவர்கள் நினைப்பதில்லை; இப்பொழுது அவர்கள் செயல்கள் அவர்களை வளைத்துக் கொண்டன, அவை நம் கண்முன் இருக்கின்றன.
இஸ்ராயேலில் சதித்திட்டம் மலிந்துள்ளது: தங்கள் தீமையினால் அரசனையும், பொய்களினால் தலைவர்களையும் மகிழ்வித்தனர்; அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சதித்திட்டத்தால் அவர்கள் உள்ளம் அடுப்பைப் போல் எரிகின்றது. இரவெல்லாம் அவர்களது கோபத்தீ கனன்று கொண்டிருந்தது, காலையில் தீக்கொழுந்து போலச் சுடர் விட்டெரியும்.
அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் எரிகிறார்கள், தங்களை ஆளுகிறவர்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; அவர்களின் அரசர்கள் யாவரும் வீழ்ந்துபட்டனர், அவர்களுள் எவனுமே நம்மை நோக்கிக் கூப்பிடவில்லை.
அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் மேல் நம் வலையை விரித்திடுவோம்; வானத்துப் பறவைகளைப் போல் அவர்களைக் கீழே வீழ்த்தி அவர்கள் தீச்செயல்களுக்காகத் தண்டிப்போம்.
அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் நம்மை விட்டு அகன்று போனார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, ஏனெனில் நம்மை அவர்கள் எதிர்த்தார்கள்; அவர்களை மீட்க நமக்கு விருப்பந்தான், ஆனால் அவர்கள் நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறார்களே!
தங்கள் உள்ளத்திலிருந்து நம்மை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவதில்லை, அதற்குப் பதிலாக தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகிறார்கள்; தானியத்திற்காகவும், திராட்சை இரசத்திற்காகவும் தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; ஆயினும் நமக்கெதிராய் எழும்புகிறார்கள்.
பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.