யோசியாஸ் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டில், அவன் இன்னும் இளைஞனாயிருந்த போதே, தன் மூதாதையாகிய தாவீதின் கடவுளைத் தேடத் தொடங்கினான். தன் ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் யூதாவிலும் யெருசலேமிலும் இருந்த மேடைகளையும் சிலைத்தோப்புகளையும், வார்க்கப்பட்ட சிலைகளையும், செதுக்கப்பட்ட சிலைகளையும் அகற்றினான்.
அவனது முன்னிலையில் பாவால்களின் பலிபீடங்கள் இடிக்கப்பட்டன. அவற்றின்மேல் வைக்கப்பட்டிருந்த வார்க்கப்பட்டனவும் செதுக்கப்பட்டனவுமான சிலைகள் துண்டு துண்டாக்கப் பட்டன; அவற்றிற்குப் பலியிட்டவர்களின் கல்லறைகளின் மேல் அவற்றின் இடிசல்கள் கொட்டப்பட்டன. சிலைத்தோப்புகளும் அழிக்கப்பட்டன.
இஸ்ராயேல் நாடெங்கிலுமுள்ள பலிபீடங்களையும் சிலைத்தோப்புகளையும் செதுக்கப்பட்ட சிலைகளையும் கட்டப்பட்ட எல்லாக் கோவில்களையும் அவ்வாறே அழித்தான். பின்பு யோசியாஸ் யெருசலேமுக்குத் திரும்பினான்.
இவ்வாறு நாட்டையும் ஆலயத்தையும் சுத்தப்படுத்தின பின்பு தன் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் யோசியாஸ் எசெலியாவின் மகன் சாப்பானையும், நகரத் தலைவர்களுள் ஒருவனான மவாசியாசையும், பதிவு செய்பவனான யோவாக்காசின் மகன் யோகாவையும் தன் கடவுளான ஆண்டவரின் ஆலயத்தைப் பழுதுப் பார்க்கும்படி அனுப்பினான்.
அவர்கள் பெரிய குரு எல்கியாசிடம் வந்து, மனாசே, எப்பிராயீம், இஸ்ராயேலின் எஞ்சிய ஊர்கள், யூதா, பென்யமீன் நாடெங்குமுள்ள குடிகளிடமிருந்தும், யெருசலேமின் குடிகளிடமிருந்தும் லேவியர், வாயிற்காவலர் வசூலித்துக் கடவுளின் ஆலயத்தில் கொண்டு வந்து சேர்த்திருந்த பணத்தைப் பெற்றார்கள்.
அம் மனிதர்கள் எல்லாவற்றையும் நேர்மையோடு செய்து வந்தனர். வேலையை விரைவாய் நடத்தி அதை மேற்பார்க்க மெராரி புதல்வரில் யாகாத்தும் அப்தியாசும், காத் புதல்வரில் சக்கரியாசும் மெசொல்லாமும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இசைக்கருவிகளை வாசிப்பதில் திறமை படைத்த லேவியர்கள்.
இவர்கள் சுமைகாரரையும், பற்பல வேலைகளைச் செய்துவந்த மற்ற எல்லாரையும் மேற்பார்த்து வந்தனர்; இன்னும் சிலர் எழுத்தரும் அலுவலரும் வாயிற் காவலருமாய்ப் பணியாற்றினர்.
கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு நீங்கள் போய் எனக்காகவும், இஸ்ராயேலிலும் யூதாவிலும் எஞ்சியிருப்போருக்காகவும் ஆண்டவரை வேண்டுங்கள். இந்நூலில் எழுதப்பட்டுள்ளவாறு நடந்திருக்க வேண்டிய நம் முன்னோர்கள் ஆண்டவரின் கட்டளையை மீறினதனால் அன்றோ ஆண்டவரின் கடுங்கோபம் நம் மேல் மூண்டது? என்றான்.
எல்கியாசும் அரசன் அவனோடு அனுப்பியிருந்த மற்றவர்களும் அரசனின் கட்டளைப்படியே ஒல்தாள் என்ற இறைவாக்கினளிடம் போனார்கள். இவள் அஸ்ராவிற்குப் பிறந்த தோக்காத்தின் மகனான செல்லும் என்னும் ஆடைக் கண்காணிப்பாளனின் மனைவி (இவள் யெருசலேமின் இரண்டாம் பகுதியில் வாழ்ந்து வந்தாள்). அவர்கள் அவளிடம் சென்று செய்தியை அறிவித்தனர்.
இதோ யூதாவின் அரசனுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட அந்நூலில் எழுதப்பட்டுள்ள தீமைகளையும் எல்லாச் சாபங்களையும் நாம் இவ்விடத்தின் மேலும், இதன் குடிகளின் மேலும் வரச் செய்வோம்.
ஏனெனில், அவர்கள் நம்மைப் புறக்கணித்து, அந்நிய தெய்வங்களுக்குப் பலியிட்டு, தங்கள் தீய நடத்தையால் நமக்குக் கோபம் மூட்டியுள்ளனர். எனவே, நமது கடுங்கோபம் இவ்விடத்தின் மேல் மூண்டெழும். அக்கோபக்கனல் அவிந்து போகாது.'
ஆண்டவரை நோக்கி மன்றாட வேண்டும் என்று உங்களை அனுப்பின யூதாவின் அரசனிடம் நீங்கள் போய்ச் சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குச் சொல்லுகிறதைக் கேளும்: 'நீ அந்நூலின் வார்த்தைகளைக் கேட்டவுடனே
உள்ளம் உருகி, இவ்விடத்திற்கும் யெருசலேம் குடிகளுக்கும் எதிரான வசனங்களைக்கேட்டு, நமக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, நமக்கு அஞ்சி, உன் ஆடைகளைக் கிழித்து, நமக்கு முன்பாகக் கண்ணீர்விட்டு அழுததால், இதோ நாம் உன் மன்றாட்டைக் கேட்டோம்.
நாம் சில நாட்களுக்குள் உன்னை உன் மூதாதையர் அருகே சேர்ப்போம். சமாதானத்துடன் நீ கல்லறைக்குப் போவாய். நாம் இந்நகரின் மேலும், அதன் குடிகளின் மேலும் வரச்செய்யும் எல்லாத் தீமைகளையும் நீ உன் கண்களால் காணப்போகிறதில்லை" என்றான். தூதர்களோ திரும்பி வந்து அவள் சொன்னதையெல்லாம் அரசனுக்கு அறிவித்தனர்.
பின் ஆண்டவரின் ஆலயத்துக்குப் போனான். யூதாவின் எல்லா மனிதரும், யெருசலேமின் குடிகளும் குருக்களும் லேவியரும், பெரியோர் சிறியோர் அனைவரும் அவனோடு போனார்கள். அவர்கள் எல்லாரும் ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்த போது, அரசன் நூல் முழுவதையும் அவர்களின் முன்பாக வாசித்தான்.
பிறகு அரசன் தன் மேடையின் மேல் நின்று கொண்டு தான் வாசித்த அந்நூலில் எழுதப்பட்டிருப்பது போல், தான் ஆண்டவரைப் பின்பற்றுவதாகவும், அவருடைய கட்டளைகளையும் நீதி முறைகளையும் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் பின்பற்றி நடப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தான்; ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்தான்.
பின்பு யெருசலேமிலும் பென்யமீனிலும் இருந்த யாவரையும் அதற்கு உட்படும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். எனவே யெருசலேமின் குடிகள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையின்படியே செய்தார்.
யோசியாஸ் இஸ்ராயேல் மக்களின் நாடெங்குமுள்ள அருவருப்பானவை அனைத்தையும் அகற்றினான்; இஸ்ராயேலில் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையே வழிபடுமாறு செய்தான். அவன் வாழ்நாள் முழுவதும், அவர்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை விட்டு அகன்றதேயில்லை.