தீரின் அரசன் ஈராமிடம் அவர் தூதுவரை அனுப்பி, "என் தந்தை தாவீது தாம் வாழ்வதற்கு அரண்மனையைக் கட்டும்படி தாங்கள் தயைகூர்ந்து அவருக்குக் கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே;
அவருக்குச் செய்தது போலவே எனக்கும் செய்யுமாறு வேண்டுகிறேன். நான் என் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டவிருக்கிறேன். அவரது திருமுன் நறுமணத்தூபம் காட்டுவதற்கும், என்றும் இருக்குமாறு காணிக்கை அப்பங்களை வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும் ஓய்வுநாட்களிலும் அமாவாசை நாட்களிலும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களின் போதும், இஸ்ராயேலர் தகனப்பலி செலுத்துவதற்கும், அவ்வாலயத்தை அவரது திருப்பெயருக்கு அர்ப்பணிக்க எண்ணியுள்ளேன். இவை எல்லாம் இஸ்ராயேலருக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டவை.
அவரது மகிமைக்கு இணையான கோவிலைக் கட்ட யாரால் முடியும்? விண்ணும் விண்ணகங்களும் அவரைக் கொள்ள இயலாதிருக்க அவருக்கு ஓர் ஆலயம் கட்ட எனக்கு என்ன தகுதி இருக்கிறது? அவரது திருமுன் தூபம் காட்டுவதற்கேயன்றி அவருக்கென ஓர் ஆலயம் எழுப்ப நான் யார்?
ஆகவே கற்றறிந்த ஒரு கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதாநூல், சிவப்புநூல், இளநீலநூல் ஆகியவற்றிலும் வேலைசெய்யும் நிபுணனாகவும் சித்திர வேலை தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், என்னோடு யூதாவிலும் யெருசலேமிலும் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்யவேண்டும்.
மேலும் லீபானிலிருந்து கேதுரு மரங்களையும் தேவதாரு மரங்களையும் வாசனை மரங்களையும் தாங்கள் எனக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன். ஏனெனில் உம் ஊழியர் லீபானின் மரங்களை வெட்டிப் பழக்கப்பட்டவர்கள் என நான் அறிவேன். என் ஊழியரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பார்கள்.
அதற்குத் தீரின் அரசன் ஈராம் சாலமோனுக்குப் பதில் எழுதி அனுப்பினார்: "ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு செய்கிறதினால், தங்களை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.
விண்ணையும் மண்ணையும் படைத்த இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே தமக்கு ஓர் ஆலயத்தையும், அரசனுக்கு ஒரு மாளிகையையும் கட்டுவதற்கு ஞானமும் அறிவும் புத்தியும் விவேகமுமுடைய ஒரு மகனைத் தாவீது அரசருக்குத் தந்தருளினார்.
அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன். அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, பளிங்கு, மரம், ஊதாநூல், இளநீலநூல், மெல்லிய சணல்நூல், சிவப்புநூல் ஆகியவற்றில் வேலைசெய்யக் கைதேர்ந்தவன்; எல்லாவித சித்திர வேலைகளையும் அறிந்தவன். அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே ஊகித்து அறியும் ஆற்றல் படைத்தவன். தங்கள் கலைஞரோடும், தங்களின் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.
நாங்கள் தங்களுக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபானில் வெட்டி அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாய் யோப்பா வரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை யெருசலேமுக்கு கொண்டு போகிறதோ தங்களின் பொறுப்பாகும்" என்று அதில் எழுதியிருந்தது.
பிறகு தம் தந்தை தாவீதைப் போன்று சாலமோனும் இஸ்ராயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அந்நியரைக் கணக்கிட்டார். அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.
அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.