“பெயர் வரிசைப்படியுள்ள கோத்திரங்கள் இவையே: “நாட்டின் வட எல்லையில், தாண் ஒரு பங்கைப் பெறுவான்; அது எத்லோன் வீதியிலிருந்து, ஆமாத்தின் நுழைவு வாசல் வரைக்கும் தொடரும். ஆமாத்திற்கு அடுத்ததாக ஆசார் ஏனானும், தமஸ்குவின் வடக்கு எல்லையும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுமுள்ள அதன் எல்லையின் ஒரு பகுதியாயிருக்கும்.
“கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள யூதாவின் எல்லையைக்கொண்ட பகுதியை, நீ விசேஷ கொடையாகக் கொடுக்கவேண்டும். அது 25,000 முழ அகலமும், கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள கோத்திரப் பங்குக்குச் சமானமான நீளமுமாய் இருக்கவேண்டும். பரிசுத்த ஆலயம் அதன் நடுவில் அமைந்திருக்கும்.
இது ஆசாரியருக்கான பரிசுத்த பகுதியாயிருக்கும். அது வடக்குப்புறம் 25,000 முழ நீளமாயும், மேற்குப்புறம் 10,000 முழ அகலமாயும், கிழக்குப்புறம் 10,000 முழ அகலமாயும், தெற்குப்புறம் 25,000 முழ நீளமாயும் இருக்கும். அதன் நடுவில் யெகோவாவின் பரிசுத்த ஆலயம் இருக்கும்.
“ஆசாரியருக்கான பகுதியின் எல்லையோடு லேவியர்களுக்கு 25,000 முழ நீளமும் 10,000 முழ அகலமுமான ஒரு இடம் இருக்கும். அதன் முழு நீளம் 25,000 முழமும், அகலம் 10,000 முழமுமாயிருக்கும்.
அவர்கள் அதில் எதையேனும் விற்கவோ அல்லது மாற்றீடு செய்யவோ கூடாது. அது நாட்டின் சிறப்புவாய்ந்த பகுதியாகும். அது யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருப்பதால், அது வேறுயாருக்கும் உரிமையாகக்கூடாது.
“அகலம் 5,000 முழமும், நீளம் 25,000 முழமும் உடைய எஞ்சியபகுதி, வீடுகளுக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமாக நகரின் பொதுப் பாவனைக்காக விடப்படும். நகரம் அதின் நடுவில் இருக்கும்.
பரிசுத்த இடத்தின் எல்லையோடு நீண்டுசெல்லும் எஞ்சியபகுதி கிழக்கே 10,000 முழங்களும் மேற்கே 10,000 முழங்களுமாயிருக்கும். அதன் உற்பத்திகள் நகரின் தொழிலாளர்களின் உணவுக்காகும்.
“பரிசுத்த இடமும், நகரத்தின் சொத்தும் அமைந்திருக்கும் இடத்தின் இரு பக்கங்களிலும் எஞ்சியிருக்கும் பகுதி இளவரசனுக்குரியதாகும். அது கிழக்குப் புறமாக பரிசுத்த இடத்தின் 25,000 முழ நீளமான பக்கத்திலிருந்து கிழக்கு எல்லைக்கும், மேற்குப் புறமாக 25,000 முழ நீளமான பக்கத்திலிருந்து மேற்கு எல்லைக்கும் பரந்திருக்கும். கோத்திரப் பங்குகளுக்கு அருகே அவற்றின் நீளத்துக்கு அமைவாக இவ்விருபகுதிகளும் இளவரசனுக்கு உரியதாகும். ஆலயத்தின் பரிசுத்த இடத்துடன் இருக்கும் பரிசுத்த பகுதி அவைகளுக்கு நடுவில் இருக்கும்.
எனவே, லேவியரின் சொத்துக்களும் நகரத்தின் சொத்துக்களும் இளவரசனுக்குச் சொந்தமான பகுதியின் நடுவில் இருக்கும். இளவரசனுக்கு சொந்தமான பகுதியோ, யூதாவின் எல்லைகளுக்கும் பென்யமீன் எல்லைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும்.
“இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்குச் சொத்துரிமையாக நீ பிரித்துக் கொடுக்கவேண்டிய நாடு இதுவே. இவை அவர்களுக்குரிய பகுதியாக இருக்கும்” என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.