நான் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பியிருக்கிறேன். அத்துடன் எல்லா வகையான வேலைகளையும் பற்றிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறேன்.
இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், இன்னும் பல வகையான வேலைப்பாடுகளில் ஈடுபடுவதற்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறேன்.
மேலும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபை அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.” அத்துடன் நான் உனக்குக் கட்டளையிட்டிருக்கும் யாவற்றையும் செய்யும்படி எல்லா கலைஞர்களுக்கும் வேண்டிய திறமையையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்:
அபிஷேக எண்ணெயையும், பரிசுத்த இடத்திற்குத் தேவையான நறுமணத்தூளையும் செய்ய அவர்களுக்குத் திறமையையும் கொடுத்திருக்கிறேன். “நான் உனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.
“நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியது இதுவே: நீங்கள் என் ஓய்வுநாட்களைக் கைக்கொள்ளவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நானே என்பதை நீங்கள் தலைமுறைதோறும் அறியும்படி, இது உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும்.
“ ‘இந்த ஓய்வுநாள், உங்களுக்குப் பரிசுத்த நாள் என்பதால் அதைக் கைக்கொள்ளுங்கள். அதைத் தூய்மைக்கேடாக்கும் எவனும் கொல்லப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
அது என்றென்றைக்கும் எனக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். ஏனெனில், யெகோவா வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, ஏழாம்நாளில் வேலைசெய்யாமல் ஓய்ந்திருந்தார்.’ ”