English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 14 Verses

1 பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
2 “நீங்கள் திரும்பிவந்து மிக்தோலுக்கும், கடலுக்கும் இடையேயுள்ள பிகாஈரோத் அருகே முகாமிடுங்கள் என்று இஸ்ரயேலருக்குச் சொல். அவர்கள் கடலருகே பாகால் செபோனுக்கு நேரெதிராக முகாமிடவேண்டும்.
3 ‘இஸ்ரயேலர் மனங்குழம்பி நாட்டைச் சுற்றி அலைந்து திரிகிறார்கள். பாலைவனம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது’ என்று பார்வோன் நினைப்பான்.
4 எனவே, நான் பார்வோனின் மனதைக் கடினப்படுத்துவேன். அவன் உங்களைப் பின்தொடர்ந்து வருவான். நானோ பார்வோனாலும், அவனுடைய படைகள் எல்லாவற்றினாலும் மகிமையடைவேன். அப்பொழுது நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார். இஸ்ரயேலர் அவ்வாறே செய்தார்கள்.
5 இஸ்ரயேலர் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்திய அரசன் பார்வோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவனும் அவனுடைய அதிகாரிகளும் இஸ்ரயேலரைக் குறித்து தங்கள் மனங்களை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துவிட்டோம்? இஸ்ரயேலரை போகவிட்டு, அவர்களுடைய வேலையை இழந்துவிட்டோமே!” என்றார்கள்.
6 எனவே பார்வோன், தன் தேரை ஆயத்தப்படுத்தி, தன் இராணுவவீரரையும் தன்னுடன் கூட்டிச்சென்றான்.
7 அவன் எகிப்திலுள்ள மற்ற எல்லா தேர்களோடு, மிகச்சிறந்த அறுநூறு தேர்களையும் மற்றும் அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு போனான்.
8 யெகோவா எகிப்திய அரசன் பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினபடியால், அவன் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றான். ஆனால் இஸ்ரயேலரோ துணிவுடன் அணிவகுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.
9 எகிப்தியர் பார்வோனின் குதிரைகளோடும், தேர்களோடும், குதிரைவீரர்களோடும், இராணுவப்படைகளோடும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றனர். பாகால் செபோனுக்கு எதிரே, பிகாஈரோத்துக்கு அருகே கடல் பக்கத்தில் இஸ்ரயேலர் முகாமிட்டிருந்தபோது, அவர்களை எகிப்தியர் பின்தொடர்ந்து வந்துசேர்ந்தனர்.
10 பார்வோன் நெருங்கி வந்தபொழுது இஸ்ரயேலர் நோக்கிப்பார்த்து, தங்களுக்குப்பின் எகிப்தியர் அணிவகுத்து வருவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் பயந்து, யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்.
11 அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் பிரேதக்குழிகள் இல்லையென்று எங்களைச் சாகும்படி பாலைவனத்திற்குக் கொண்டுவந்தீரோ? எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்து எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்?
12 ‘எங்களைச் சும்மாவிடும்; நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்வோம்’ என்று, நாங்கள் எகிப்திலிருக்கும்போதே உமக்குச் சொல்லவில்லையா? பாலைவனத்தில் நாங்கள் சாகிறதைவிட, எகிப்தியருக்கு வேலை செய்வது நலமாயிருந்திருக்குமே!” என்றார்கள்.
13 மோசே இஸ்ரயேல் மக்களிடம், “பயப்படாதிருங்கள். உறுதியாய் நில்லுங்கள்; யெகோவா இன்று உங்களுக்குக் கொண்டுவரப்போகும் விடுதலையைக் காண்பீர்கள். நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.
14 யெகோவா உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் மட்டும் இருங்கள்” என்றான்.
15 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ என்னிடம் முறையிட்டு அழுவது ஏன்? இஸ்ரயேலரை முன்னேறிப்போகச்சொல்.
16 நீ உன் கோலை உயர்த்தி, தண்ணீரைப் பிரிக்கும்படி கடலின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்து போகக்கூடியதாய் இருக்கும்.
17 நான் எகிப்தியரின் உள்ளத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடருவார்கள். நானோ பார்வோனாலும், அவனுடைய எல்லா படைகள், தேர்கள், குதிரைவீரர் முதலியவற்றாலும் மகிமையடைவேன்.
18 இப்படியாக நான் பார்வோனாலும், அவன் தேர்கள், குதிரைகளாலும் மகிமையடையும்போது நானே யெகோவா என்பதை எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
19 அப்பொழுது இஸ்ரயேலரின் படைக்கு முன்னாகச் சென்றுகொண்டிருந்த இறைவனின் தூதனானவர், அவ்விடத்தைவிட்டு அவர்களுக்குப் பின்னாகப் போனார். அவர்களுக்கு முன்பாக இருந்த மேகத்தூணும் விலகி, அவர்களுக்குப் பின்னாக வந்துநின்றது.
20 அது எகிப்திய படைகளுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் வந்துநின்றது. அந்த மேகம் இரவு முழுவதும் ஒரு பக்கத்துக்கு இருளையும், மற்றொரு பக்கத்துக்கு வெளிச்சத்தையும் கொடுத்தது. இதனால் இஸ்ரயேலரோ, எகிப்தியரோ இரவு முழுவதும் ஒருவரையொருவர் நெருங்கவில்லை.
21 பின்பு மோசே, கடலின்மேல் தன் கையை நீட்டினான். யெகோவா இரவு முழுவதும் பலத்த கீழ்காற்றினால் கடல்நீரைப் பின்வாங்கச்செய்து, அதை வறண்ட நிலமாக மாற்றினார். தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது.
22 இஸ்ரயேலர் கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்து சென்றார்கள். அவர்களுடைய வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல எழுந்து நின்றது.
23 எகிப்தியர் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். பார்வோனின் எல்லா குதிரைகளும், தேர்களும், குதிரைவீரரும், இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து கடலுக்குள் வந்தார்கள்.
24 யெகோவா விடியற்காலையில் நெருப்புத்தூணிலும், மேகத்தூணிலுமிருந்து எகிப்திய படையைப் பார்த்து அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
25 யெகோவா அவர்களுடைய தேர்களின் சக்கரங்களைக் கழறப்பண்ணியதால், தேரை ஓட்டுவதற்கு அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. எனவே எகிப்தியர், “நாம் இஸ்ரயேலரைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா எகிப்தை எதிர்த்து அவர்களுக்காகப் போராடுகிறார்” என்றார்கள்.
26 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “கடல் தண்ணீர் எகிப்தியர்மேலும் அவர்களுடைய தேர்கள், குதிரைவீரர்மேலும் வரும்படி நீ உன் கையை கடல்மேல் நீட்டு” என்றார்.
27 அப்படியே மோசே தன் கையை கடலுக்கு மேலாக நீட்டினான். அதிகாலையில் கடல் தண்ணீர் திரும்பி, அதன் இடத்திற்கு வந்தது. ஆனால் எகிப்தியரோ கடலை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தார்கள். யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திவிட்டார்.
28 கடல் தண்ணீர் திரும்பிவந்து, தேர்களையும், குதிரைவீரர்களையும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பார்வோனின் படை முழுவதையும் கடலுக்குள் மூடிவிட்டது. அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
29 இஸ்ரயேலரோ கடலின் நடுவேயுள்ள காய்ந்த நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள். அவர்களுடைய வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல நின்றது.
30 இவ்விதமாக யெகோவா அன்றையதினம் எகிப்தியரின் கைகளிலிருந்து இஸ்ரயேலரைக் காப்பாற்றினார். கடற்கரையிலே எகிப்தியர் இறந்துகிடப்பதை இஸ்ரயேலர் கண்டார்கள்.
31 எகிப்தியருக்கு எதிராகக் காண்பிக்கப்பட்ட யெகோவாவின் வல்லமையை இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும், அவருடைய அடியானாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள்.
×

Alert

×