அவன் வார்ப்பிக்கப்பட்ட உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
அதன் விளிம்பின் கீழ்ப்பகுதியில் ஒரு முழத்திற்கு பத்து காளைகளின் உருவங்கள் இருக்கும்படி சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன.
வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன.
தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 60,000 லிட்டர்[* அதாவது, சுமார் 60,000 லிட்டர் என்பது மூல மொழியில் 3,000 பாத் என்றுள்ளது ] தண்ணீர் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
அதன்பின் அவன், கழுவுவதற்காக பத்து தண்ணீர்த் தொட்டிகளையும் செய்து, ஐந்து தொட்டிகளை தெற்குப் பக்கத்திலும் ஐந்து தொட்டிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அவைகளிலேயே தகன காணிக்கைக்குரிய பொருட்கள் கழுவப்பட்டன. ஆனால் அந்தப் பெரிய தொட்டியோ ஆசாரியர்கள் கழுவுவதற்கென இருந்தது.
அவன் பத்து தங்க விளக்குத் தாங்கிகளைக் குறிக்கப்பட்ட விதிப்படி செய்தான். அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான்.
அவன் பத்து மேஜைகளையும் செய்து, அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். அத்துடன் தங்கத்தினால் நூறு தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான்.
அத்துடன் ஈராம் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, இறைவனின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்:
இரண்டு தூண்கள், தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள், தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள்,
பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், இறைச்சி குத்தும் முட்கரண்டிகள் இன்னும் தேவையான மற்றும் எல்லாப் பொருட்களுமே. யெகோவாவினுடைய ஆலயத்தின் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் அபி என்பவன் அரசன் சாலொமோனுக்கு பளபளக்கும் வெண்கலத்தினால் செய்துமுடித்தான்.