பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது கடலிலிருந்து ஒரு மிருகம் எழும்பிவருவதைப் பார்த்தேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து கிரீடங்களும், அதின் தலைகளின்மேல் தேவனை அவமதிக்கும் பெயர்களும் இருந்தன.
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போல இருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; இராட்சசப் பாம்பானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
அதின் தலைகளில் ஒன்றில் மரணத்திற்குரிய காயமடைந்திருப்பதைப் பார்த்தேன்; ஆனாலும் மரணத்திற்குரிய அந்தக் காயம் குணமாக்கப்பட்டது. பூமியிலுள்ள எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்த மிருகத்தைப் பின்பற்றி,
அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த இராட்சசப் பாம்பை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு நிகரானவன் யார்? அதோடு யுத்தம் செய்பவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்செய்து அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு கோத்திரம், மொழி, தேசம் மற்றும் மக்களின்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது.
அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது.
மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது.
மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.