இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் துவண்டுபோகும்; கடலின் உயிரினங்களும் வாரிக்கொள்ளப்படும்.
என் மக்கள் அறிவில்லாததினால் அழிகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாக இல்லாமலிருக்க நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
என் மக்கள் மரக்கட்டையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கைத்தடி அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்று இருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி அலையச்செய்தது; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திராமல் விபச்சாரவழியில் போனார்கள்.
அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள்.
உங்கள் மகள்கள் வேசித்தனம் செய்கிறதினாலும், உங்கள் மருமக்கள்கள் விபசாரம் செய்கிறதினாலும், நான் அவர்களை தண்டிக்காமல் இருப்பேனோ? அவர்கள் விலகி விபச்சாரிகளோடே கூடப்போய் தாசிகளோடே [* இந்த ஜனங்கள் கானானியர் சிலை வழிபடுகிறவர்கள் மத்தியில் வாழ்ந்தார்கள். அந்த தெய்வங்களை வணங்குவதால் தாங்கள் நன்மை அடைவார்கள் என்று நம்பினார்கள். ஆகையால் அந்த கோயிலின் தேவதாசிகளோடு உடலுறவு வைத்து கொள்வதால் தங்களுடைய பூமியின் விளைச்சலும் மிருகங்களும் ஆசிர்வதிக்கப்படும் என்று கருதினார்கள்.] பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத மக்கள் அதினால் அகப்பட்டு விழுவார்கள்.