ஆனால் அந்நேரத்தில், தாவீதின் குடும்பத்தாருக்கும், எருசலேமின் குடிமக்களுக்கும் ஒரு புதிய நீரூற்று திறக்கப்படும். அந்த ஊற்று அவர்களின் பாவத்தைக் கழுவி அந்த ஜனங்களைச் சுத்தப்படுத்தும்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில் நான் பூமியிலுள்ள அனைத்து விக்கிரகங்களையும் நீக்குவேன். ஜனங்கள் அவற்றின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். நான் பூமியிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசிகளையும், சுத்தமற்ற ஆவிகளையும் நீக்குவேன்.
ஒருவன் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொன்னால் பின்னர் அவன் தண்டிக்கப்படுவான். அவன் பெற்றோர்கள் அவனது சொந்த தாயும் தந்தையும் அவனிடம், ‘நீ கர்த்தர் நாமத்தால் பொய் சொன்னாய். எனவே நீ மரிக்க வேண்டும்!’ என்று சொல்வார்கள். அவனது சொந்த தாயும் தந்தையும் அவனைத் தீர்கதரிசனம் சொன்னதற்காகக் குத்திக்கொல்வார்கள்.
அந்நேரத்தில் தீர்க்கதரிசிகள் தமது தரிசனங்களுக்காவும்,தீர்க்கதரிசனங்களுக்காகவும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தாம் தீர்க்கதரிசிகள் என்பதைக் காட்டும் முரட்டு ஆடையை அணியமாட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசனங்களால் ஜனங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் அவ்வாடைகளை அணிவதில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “வாளே, மேய்ப்பனைத் தாக்கு. என் நண்பனைத் தாக்கும் மேய்ப்பனைத் தாக்கு. அந்த மந்தை ஓடிச் செல்லும். நான் அந்தச் சிறியவர்களையும் தண்டிப்பேன்.
பின்னர் நான் மீதியானவர்களைச் சோதிப்பேன். நான் அவர்களுக்கு அநேக துன்பங்களைக் கொடுப்பேன். அத்துன்பங்கள் வெள்ளியைச் சுத்தமான வெள்ளி என்று நிரூபிக்கும் நெருப்பைப் போன்றிருக்கும். ஒருவன் தங்கத்தைச் சோதிப்பது போல நான் அவர்களைச் சோதிப்பேன். பின்னர், அவர்கள் என்னை உதவிக்காக வேண்டுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலுரைப்பேன். நான், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன். அவர்கள், ‘கர்த்தர் எங்கள் தேவன்’ ” என்பார்கள்.