English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Proverbs Chapters

Proverbs 14 Verses

1 ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.
2 சரியான வழியில் வாழ்கிறவர்கள் கர்த்தரை மதிக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இல்லாதவன் கர்த்தரை வெறுக்கிறான்.
3 அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகள் அவனைக் காக்கும்.
4 வேலை செய்வதற்கு எருதுகள் இல்லாவிட்டால் களஞ்சியங்கள் வெறுமையாக இருக்கும். எருதுகளின் பலத்தைப் பயன்படுத்தி ஜனங்கள் அதிக விளைச்சலைப் பெறமுடியும்.
5 உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன்.
6 தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும்.
7 முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை.
8 புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப் பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
9 மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள்.
10 ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.
11 தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும்.
12 ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.
13 ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ள சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது.
14 தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்.
15 முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.
16 அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.
17 விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.
18 அறிவற்றவர்கள் தங்கள் மூடத்தனத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறிவாளிகளோ ஞானத்தையே வெகுமதியாகப் பெறுவார்கள்.
19 நல்லவர்கள் தீயவர்களுக்கு எதிராக வெற்றிப் பெறுவார்கள். தீயவர்கள் அவர்களின் உதவிக்காகக் கெஞ்சும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
20 ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.
21 உனது பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி கெட்டவற்றை நினையாதே. நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், ஏழை ஜனங்களிடம் இரக்கமாக இரு.
22 தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர்.
23 நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.
24 அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர்.
25 உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.
26 கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.
27 கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரணவலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.
28 ஒரு அரசன் ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.
29 பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.
30 மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.
31 ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக் கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான்.
32 தீய மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தோற்கடிக்கப்படுவான். ஆனால் நல்ல மனிதனோ மரணகாலத்திலும் கூட அடைக்கலம் பெறுவான்.
33 அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப் பற்றிக் கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள்.
34 நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும்.
35 அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் அரசன் மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் அரசன் கோபப்படுவான்.
×

Alert

×