என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள்.
ஏனென்றால் நீங்கள் என்னோடு உண்மையாய்ப் பணிபுரிகிறீர்கள். எனது நண்பர்களே! அப்பெண்களுக்கு உதவுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் நற்செய்தியை மக்களிடம் பரப்பிட உதவினார்கள். அவர்கள் கிலேமந்தோடும் மற்றவர்களோடும் சேர்ந்து எனக்கு உதவினார்கள். அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் [*ஜீவ புஸ்தகத்தில் தேவனுடைய பிள்ளைகளின் பெயர்கள் எழுதப்பட்ட ஜீவ புஸ்தகம். வெளி 3:5; 21:27.] எழுதப்பட்டுள்ளன.
நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள்.
தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.
இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள்.
என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார்.
மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன்.
பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோது எனக்கு ஆதரவு கொடுத்தது, உங்கள் சபை மட்டுமே.
எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தன. தேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றன. உங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. உங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தன. அப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார். அது அவருக்கு விருப்பமானதாயிற்று.
கிறிஸ்துவின் மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்க்கும்போது வாழ்த்துதல் கூறுங்கள். என்னோடு இருக்கிற தேவனுடைய மக்களும் உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறார்கள்.