அக்கைத்தடிகளை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் வை. அந்த இடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். அவர்களில் ஒருவனை நான் உண்மையான ஆசாரியனாக தேர்ந்தெடுப்பேன்.
நான் யாரைத் தேர்ந்தெடுப்பேனோ அவனது கைத்தடியில் இலைகள் துளிர்த்திருக்கும். இதன் மூலம் உனக்கும் எனக்கும் எதிராக முறையிடுபவர்களை நான் தடுப்பேன்” என்று கூறினார்.
இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசினான். ஒவ்வொரு 12 கோத்திரங்களின் தலைவரும் தங்கள் கைத்தடியை அவனிடம் கொடுத்தார்கள். மொத்தம் 12 கைத்தடிகளைப் பெற்றான். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கைத்தடி என்பதாக இருந்தது. ஒரு கைத்தடியில் ஆரோனுடைய பெயர் இருந்தது.
மறுநாள் மோசே கூடாரத்திற்குள் நுழைந்தபோது லேவியின் குடும்பத்திலிருந்து வந்த ஆரோனின் கைத்தடியில் புதிய இலைகள் துளிர் விட்டிருந்ததை மோசே பார்த்தான். அதில் கிளைகளும் தோன்றி வாதுமை பழங்களும் காணப்பட்டன.
மோசே கர்த்தரின் சமூகத்திலிருந்து கைத் தடிகளை எடுத்து வந்து, இஸ்ரவேல் ஜனங்களிடம் அவற்றைக் காட்டினான். அவரவர் தங்கள் கைத்தடிகளை பார்த்து எடுத்துக்கொண்டனர்.
பிறகு கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் கைத்தடியை மீண்டும் கூடாரத்திற்குள் எனது உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக வை. எப்போதும் எனக்கு எதிராகத் திருப்புவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இது எனக்கு எதிராக அவர்கள் முறையிடுவதை தடுக்கும். எனவே அவர்களை நான் அழிக்கமாட்டேன்” என்று கூறினார்.