Indian Language Bible Word Collections
Lamentations 3:38
Lamentations Chapters
Lamentations 3 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Lamentations Chapters
Lamentations 3 Verses
1
நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன். கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார். நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
2
கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல இருட்டில் வழிநடத்தி கொண்டுவந்தார்.
3
கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார். அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
4
அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார். அவர் எனது எலும்புகளை உடைத்தார்.
5
கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார். அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.
6
அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார். நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார்.
7
கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார். என்னால் வெளியே வரமுடியவில்லை. அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார்.
8
நான் கதறினாலும் உதவி கேட்டாலும் கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை.
9
அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார். அவர் எனது பாதையைக் கோணலாக்கினார்.
10
கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார். அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார்.
11
கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார். அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார். அவர் என்னை பாழாக்கினார்.
12
அவர் தனது வில்லை தயார் செய்தார். அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
13
அவர் தனது அம்பை என்னுடைய வயிற்றில் எய்தார்.
14
நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன். நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள்.
15
கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார். அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார்.
16
கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார். அவர் என்னைத் தூசியில் தள்ளினார்.
17
நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.
18
நான் எனக்குள் “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன்” என்றேன்.
19
கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும். எனக்கு வீடு இல்லை. நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
20
நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
21
ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
22
கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
23
ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24
நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.
25
கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
26
ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.
27
ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது. ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது.
28
கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது, அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
29
அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும். அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம்.
30
அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும். அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.
31
கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும்.
32
கர்த்தர் தண்டிக்கும்போது அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார். அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும் அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.
33
கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை. அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை.
34
கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை. யாரோ ஒருவன் பூமியிலுள்ள அனைத்து சிறைக் கைதிகளையும் தன் காலுக்கடியில் நசுக்குவதை அவர் விரும்புவதில்லை.
35
யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை. ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள்.
36
கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை. கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை.
37
ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது, நிகழச் செய்யவும் முடியாது.
38
உன்னதமான தேவனே நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.
39
ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.
40
நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம். பிறகு கர்த்தரிடம் திரும்புவோம்.
41
பரலோகத்தின் தேவனிடம் நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம்.
42
நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம். இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
43
நீர் கோபத்தால் மூடப்பட்டு எங்களைத் துரத்தினீர். நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
44
ஜெபம் எதுவும் வந்து சேராதபடி நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45
மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும் அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.
46
எங்களது பகைவர்கள் எல்லாம் எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள்.
47
நாங்கள் பயந்திருக்கிறோம். நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம். நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன்.
48
எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது! எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன்.
49
எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன! நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்!
50
கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
51
எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன.
52
அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள்.
53
நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.
54
என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.
55
கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.
56
நீர் எனது சத்தத்தைக் கேட்டீர். நீர் உமது காதுகளை மூடவில்லை. நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை.
57
நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர். “பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர்.
58
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.
59
கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர். இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும்.
60
எனது பகைவர்கள் எவ்வாறு என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர்.
61
கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.
62
எல்லா நேரத்திலும் எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.
63
கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்!
64
கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!
65
அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!
66
அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்! கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!