“சர்வ வல்லமையுள்ள தேவன், ஜனங்களின் வாழ்வில் கேடுகள் நிகழும் காலத்தை அறிந்த போதும் அவர் அதற்குப் பரிகாரம் செய்யும் காலத்தை அவரைப் பின்பற்றுவோர் அறியமுடியாமலிருப்பது ஏன்?
“அயலானின் நிலத்தின் பகுதியை அடைவதற்காக ஜனங்கள் எல்லைக் குறிப்புகளை மாற்றுகிறார்கள். ஜனங்கள் மந்தைகளைத் திருடி, வேறு மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
பெற்றோரற்ற அனாதைப் பிள்ளைகளுக்குச் சொந்தமான கழுதையை அவர்கள் திருடுகிறார்கள். விதவை தான் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும்வரை அவளது பசுவைக் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள்.
ஏழைகள் வீடின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அலையும்படி வற்புறுத்துகிறார்கள். தீயோரிடமிருந்து அந்த ஏழைகள் தங்களை ஒளித்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
“பாலைவனத்தில் உணவு தேடி அலையும் காட்டுக் கழுதைகளைப்போல் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்கள் உணவு தேடுவதற்காக அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்காக உணவு பெறும் பொருட்டு அவர்கள் மாலையில் வெகு நேரம்வரை உழைக்கிறார்கள்.
வயல்களில் வைக்கோலும் புல்லும் வெட்டியபடி ஏழைகள் இரவில் வெகு நேரம் உழைக்க வேண்டும். வயல்களில் திராட்சைப் பழங்களைப் பறித்துச் சேர்ப்பவர்களாய், அவர்கள் செல்வந்தர்களுக்காக உழைக்க வேண்டும்.
அவர்கள் பர்வதங்களில் மழையால் நனைந்திருக்கிறார்கள். குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை. எனவே அவர்கள் பெரிய பாறைகளுக்கு அருகே அண்டிக்கொள்கிறார்கள்.
ஏழைகளுக்கு ஆடையில்லை. எனவே அவர்கள் வேலை செய்யும்போது நிர்வாணமாயிருக்கிறார்கள். தீயோருக்கு அவர்கள் தானியக்கட்டுகளைச் சுமந்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த ஏழைகள் பசியோடிருக்கிறார்கள்.
ஏழைகள் ஒலிவ எண்ணெயைப் பிழிந்தெடுக்கிறார்கள். திராட்சைரசம் பிழியும் இடத்தில் அவர்கள் திராட்சைக்கனிகளின் மேல் நடக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பருகுவதற்கு எதுவுமில்லை.
விபச்சாரம் செய்பவன் (தகாத நெறியில் ஒழுகுபவன்) இரவுக்காகக் காத்திருக்கிறான். ‘யாரும் என்னைப் பார்க்கமாட்டார்கள்’ என அவன் நினைக்கிறான். ஆயினும் அவன் தனது முகத்தை மூடிக்கொள்கிறான்.
இரவில் இருள் சூழ்ந்திருக்கும்போது, தீயோர் ஜனங்களின் வீடுகளை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். ஆனால் பகலொளியில், அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்துகொண்டு பூட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒளியைவிட்டு விலகியிருக்கிறார்கள்.
“வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொருள்களைப்போன்று தீயோர் அகற்றப்படுவார்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலம் சபிக்கப்பட்டது, எனவே அவர்கள் தங்கள் வயல்களிலிருந்து திராட்சைக் கனிகளைத் திரட்டமாட்டார்கள்.
தீயவன் மரிப்பான், அவனது சொந்த தாயார் கூட அவனை மறந்துவிடுவார். அவன் உடலைத் தின்னும் புழுக்களே, அவனை விரும்புகிறவளாயிருக்கும். ஜனங்கள் அவனை நினைவுகூரமாட்டார்கள். எனவே அத்தீயவன் மரத்துண்டைப்போன்று உடைந்துபோவான்.
ஆற்றலுள்ள மனிதர்களை அழிக்க, தீயோர் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள். தீயோர் ஆற்றல் பெறக்கூடும், ஆனால், அவர்களுக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையின் மீது நிச்சயமில்லை.
தீயோர் சிலகாலம் வெற்றியடையலாம். ஆனால் அவர்கள் அழிந்துப்போவார்கள். தானியத்தைப்போன்று அவர்கள் அறுக்கப்படுவார்கள். அத்தீய ஜனங்கள் பிறரைப் போலவே எல்லோராலும் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.