மெல்கிசேதேக் சாலேமின் அரசன். அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான்.
அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான். (சாலேமின் அரசனான மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் அரசன்” என்ற பொருளும் “சலேமின் அரசன்” என்பதற்கு “சமாதானத்தின் அரசன்” என்ற பொருளும் உண்டு.)
இவனது தாய் தந்தையரைப் பற்றி எவருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியாது. எங்கே பிறந்தான், எப்போது இறந்தான் என்றும் ஒருவருக்கும் தெரியாது. இவன் தேவனுடைய குமாரனைப் போன்றவன். அவன் என்றென்றைக்கும் ஆசாரியனாகவே இருக்கிறான்.
இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள்.
ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது.
லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை [*சட்டம் மோசேயின் சட்டம்.] இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார்.
நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.
“நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” [✡சங்கீதம் 110:4-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம்.
ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார். “ ‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’ என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார். மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” சங்கீதம் 110:4 என்றும் அவர் சொன்னார்.
மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு [†உடன்படிக்கை தேவன் தம் மக்களுக்கு ஒரு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையைக் கொடுத்தார். யூதர்களுக்கு மோசேயின் சட்டங்கள் தான் உடன்படிக்கை. ஆனால் இப்போது தேவன் புதிய சிறந்த உடன்படிக்கையை கிறிஸ்துவின் மூலம் கொடுத்தார்.] இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.
ஆகவே, இயேசுவே நமக்குத் தேவையான சிறந்த பிரதான ஆசாரியர். அவர் பரிசுத்தமானவர். அவரிடம் எவ்விதப் பாவங்களும் இல்லை. அவர் குற்றமில்லாதவர். பாவிகளால் பாதிக்கப்படாதவர். இவர் பரலோகத்தில் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
இவர் மற்ற ஆசாரியர்களைப் போன்றவரல்லர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பலிசெலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களுக்காகவும், பின்பு மக்களின் பாவங்களுக்காகவும் பலி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இவரோ அவ்வாறில்லை. அத்தகைய தேவையும் இவருக்கில்லை. இவர் தன்னையே பலிகொடுத்திருக்கிறார். அதுவே என்றென்றைக்கும் போதுமானது.
மோசேயின் சட்டம் மனிதர்களை ஆசாரியர்களாக நியமிக்கிறது. அம்மனிதர்களுக்கு பலவீனமிருந்தது. ஆனால் ஆணை அடங்கிய அந்தப் பகுதி சட்டத்திற்குப் பிறகு வருகிறது. மேலும் அது என்றென்றைக்குமாக பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய குமாரனான இயேசுவைப் பிரதான ஆசாரியராக நியமித்தது.