எனவே செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் மீண்டும் எழுந்து எருசலேமில் ஆலய வேலையை ஆரம்பித்தனர். தேவனுடைய தீர்க்கதரிசிகள் அனைவரும் அவர்களோடு இருந்து, அவர்கள் வேலைக்கு பக்கப்பலமாக இருந்தார்கள்.
அப்போது தத்னாய் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களுடன் இருந்தவர்களும் செருபாபேலிடமும், யெசுவா மற்றும் அவர்களோடு இருந்தவர்களிடம் சென்றார்கள். தத்னாயும், அவனோடு வந்தவர்களும் செருபாபேல் மற்றும் அவனுடனிருந்தவர்களிடம், “இந்த ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று கேட்டார்கள்.
ஆனால் தேவன் யூதத் தலைவர்களைக் கவனித்துக் கொண்டு இருந்தார். கட்டிடம் கட்டுபவர்கள், இந்தச் செய்தி தரியுவினிடத்தில் போய் சேருகிறவரைக்கும் தம் வேலையை நிறுத்தவில்லை. கோரேசு அரசன் பதில் செல்லுகிறவரைக்கும் அவர்கள் தொடர்ந்து வேலைச் செய்தனர்.
ஐபிராத்து ஆற்றின் மேற்குப்பகுதிக்கு ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், மேலும் சில முக்கியமான ஜனங்களும் அரசனான தரியுவுக்குக் கடிதம் அனுப்பினார்கள்.
தரியு அரசனே! நாங்கள் யூதா பகுதிக்குப் போனது உமக்குத் தெரியும். நாங்கள் மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம். யூதாவிலுள்ள ஜனங்கள் அவ்வாலயத்தைப் பெரிய கற்களால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவர்களில் பெரிய மரத்தடிகளை வைத்துக்கொண்டிருந்தனர். மிகக் கவனமாக வேலை நடந்துக்கொண்டிருந்தது. யூதா ஜனங்கள் கடுமையாக வேலைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வேலையை விரைவாகச் செய்கின்றனர், அது விரைவில் முடியும்.
அவர்களின் தலைவர்களிடம் அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளைக் குறித்து சில கேள்விகளைக் கேட்டோம். அவர்களிடம், “இவ்வாலயத்தைப் புதிது போல கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று நாங்கள் கேட்டோம்.
அவர்கள் சொன்ன பதில் இதுதான்: நாங்கள் பூமிக்கும், பரலோகத்திற்கும் தேவனுடைய ஊழியர்கள். இஸ்ரவேலின் மிகப் பெரிய அரசன் பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிமுடித்த ஆலயத்தை நாங்கள் திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் எங்கள் முற்பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்கு கோபம் வரும்படி நடந்துக்கொண்டார்கள். எனவே தேவன் எங்கள் முற்பிதாக்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுத்தார். அவன் இந்த ஆலயத்தை அழித்தான். ஜனங்களை பலவந்தமாக பாபிலோனுக்கு கைதிகளாக அழைத்துச் சென்றான்.
கடந்த காலத்தில் தேவனுடைய ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொன் மற்றும் வெள்ளிப் பொருட்களை, பாபிலோனில் உள்ள நேபுகாத்நேச்சாரின் ஆலயத்திலிருந்து கோரேசு கொண்டு வந்தான். எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனில் உள்ள ஆலயத்திற்கு எடுத்துச் சென்றான். அரசன் கோரேசு, அப்பொன் மற்றும் வெள்ளிப் பொருட்களை செஸ்பாத்சாரிடம் (செருபாபேலிடம்) கொடுத்தான். கோரேசு செஸ்பாத்சாரை ஆளுநராகத் தேர்ந்தெடுத்தான்.
பிறகு கோரேசு செஸ்பாத்சாரிடம், “இந்தப் பொன்னையும் வெள்ளியையும் எடுத்து போய் எருசலேமில் உள்ள ஆலயத்தில் திரும்ப வை. முன்பு ஆலயம் இருந்த அதே இடத்தில் மீண்டும் ஆலயத்தைக் கட்டு” என்றான்.
எனவே செஸ்பாத்சார் வந்து தேவனுடைய ஆலயத்திற்கு எருசலேமில் அஸ்திவாரம் அமைத்தான். அன்றிலிருந்து இன்று வரை வேலைத் தொடர்கிறது. ஆனால் அது இன்னும் முடியவில்லை.
இப்போது, அரசன் விரும்பினால் அரசனுடைய பழைய அதிகாரப்பூர்வமானப் பத்திரங்களைத் தேடிப்பாருங்கள். கோரேசு அரசன் எருசலேமில் தேவனுக்காக ஆலயம் கட்ட கட்டளையிட்டது உண்மை என்றால், பிறகு ஒரு கடிதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். அதில் இனி நாங்கள் என்ன செய்வது என்பது பற்றி குறிப்பிடுங்கள் என்று எழுதியிருந்தனர்.