அதனிடம் சொல், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். “ ‘சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமானவன்! நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னை வெறுமையான நிலமாக்குவேன்.
“ ‘ஏனென்றால், நீ எப்பொழுதும் எனது ஜனங்களுக்கு விரோதமாக இருந்தாய். நீ உனது வாளை இஸ்ரவேலுக்கு எதிராக அவர்களின் ஆபத்து காலத்தில் அவர்களின் இறுதித் தண்டனை காலத்தில் பயன்படுத்தினாய்!’ ”
எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு, உனக்கு மரணம் வரும்படி ஆணையிடுகிறேன். மரணம் உன்னைத் துரத்தும். நீ ஜனங்களைக் கொல்லுவதை வெறுப்பதில்லை. எனவே மரணம் உன்னைத் துரத்தும்.
நான் சேயீர் மலையைப் பாழான இடமாக்குவேன். அந்த நகரத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். அந்த நகரத்திற்குள் செல்ல விரும்பும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன்.
நீ சொன்னாய், “இந்த இரண்டு குலங்களும், நாடுகளும் (இஸ்ரவேலும் யூதாவும்) என்னுடையதாக இருக்கும். நாங்கள் அவர்களைச் சொந்தமாக எடுத்துக்கொள்வோம்.” ஆனால் கர்த்தர் அங்கே இருக்கிறார்!
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீ என் ஜனங்கள் மேல் பொறாமையோடு இருந்தாய். நீ அவர்கள் மீது கோபத்தோடு இருந்தாய். நீ அவர்களை வெறுத்தாய், எனவே எனது உயிரைக் கொண்டு ஆணையிடுகிறேன், நீ அவர்களைப் புண்படுத்திய அதே முறையில் நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைத் தண்டித்து நான் அவர்களோடு இருப்பதை ஜனங்கள் அறியும்படிச் செய்வேன்.
நான் உனது நிந்தைகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை நீ பிறகு அறிந்துகொள்வாய். “இஸ்ரவேல் மலைக்கு விரோதமாகப் பல தீயவற்றை நீ சொன்னாய். நீ சொன்னாய், ‘இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருக்கிறது! நான் அவர்களை உணவைப்போன்று சுவைப்பேன்!’
இஸ்ரவேல் நாடு அழிக்கப்பட்டபோது நீ மகிழ்ச்சியாக இருந்தாய். நானும் உன்னை அதைப் போலவே நடத்துவேன். சேயீர் மலையும் ஏதோம் நாடு முழுவதும் அழிக்கப்படும்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”