இயேசுவைப் பின்பற்றுவோராகப் பற்பல மக்கள் மாறிகொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கிரேக்க மொழி பேசுகின்ற சீஷர்களுக்கும் மற்ற யூதச் சீஷர்களுக்கும் ஒரு விவாதம் நடந்தது. சீஷர்கள் ஒவ்வொரு நாளும் பெற்ற பங்கைப் போன்று அவர்களுடனிருந்த விதவைகளுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் சீஷர்கள் கூட்டத்தை ஒருமிக்க அழைத்தனர். அப்போஸ்தலர்கள் அவர்களை நோக்கி, “தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் எங்கள் வேலை தடையுற்றுள்ளது. அது நல்லதல்ல! மக்களுக்கு உண்பதற்கு எதையேனும் கொடுப்பதில் உதவுவதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து போதிப்பதே எங்களுக்கு நல்லது.
எனவே, சகோதரர்களே, உங்களில் ஏழு பேரைத் தேர்ந்து எடுங்கள். மக்கள் நல்லவர்களெனக் கருதுவோராக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆவியாலும், ஞானத்தாலும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த வேலையைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களை நியமிப்போம்.
கூட்டத்தினர் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். எனவே அவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஸ்தேவான் (நம்பிக்கை மிகுந்தவனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனுமான மனிதன்), பிலிப்பு, [*பிலிப்பு இவன் அப்போஸ்தலரான பிலிப்பு அல்ல.] ப்ரோகோரஸ், நிகனோர், தீமோன், பர்மேனஸ், நிக்கோலஸ் (அந்தியோகியாவிலிருந்து வந்தவனும் யூதனாக மாற்றப் பட்டவனும் ஆவான்) ஆகியோராவர்.
தேவனுடைய வார்த்தை மென்மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை எட்டியது. எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்தது. யூத ஆசாரியர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரும் கூட விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிந்தனர்.
ஸ்தேவான் மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தேவனிடமிருந்து ஸ்தேவானும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் தேவனிடமிருந்து மக்களுக்குச் சான்றுகளைக் காட்டும் வல்லமையையும் பெற்றிருந்தான்.
ஆனால் சில யூதர்கள் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். அவர்கள் ஒரு யூத ஜெப ஆலயத்திலிருந்து வந்திருந்தனர். அது விடுதலை பெற்ற யூதர்களுக்குரிய ஜெப ஆலயமாக இருந்தது. (இந்த ஜெப ஆலயம் சிரேனே, அலெக்ஸாண்டிரியா ஆகிய இடங்களிலுள்ள யூதர்களுக்கு உரியது) சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களின் யூதர்களும் அவர்களோடிருந்தனர். அவர்கள் எல்லோரும் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர்.
எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து “மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதிராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் செய்தார்கள்.
இவ்வாறு செய்ததால் யூதர்கள் மக்களையும். முதிய யூதத் தலைவர்களையும், வேதபாரகரையும் கலக்கமுறச் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபமடைந்து ஸ்தேவானிடம் வந்து அவனைப் பிடித்தனர். யூத அதிகாரிகள் கூடியிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர்.
யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான்.
நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்று அவன் கூறியதை நாங்கள் கேட்டோம். நாம் கடைப்பிடிக்குமாறு மோசே சொன்னவற்றை இயேசு மாற்றுவார் என்றும் அவன் கூறினான்” என்றனர்.