கர்த்தர் அவனிடம், “நான் உன் ஜெபத்தைக் கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன். நீ இந்த ஆலயத்தைக் கட்டினாய். நான் இதனைப் பரிசுத்த இடமாக்கினேன். எனவே நான் அங்கே என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவேன். எப்பொழுதும் அதைக் கவனித்து அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பேன்.
உன் தந்தையைப் போலவே நீயும் எனக்கு ஊழியம் செய்யவேண்டும். அவன் நல்லவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தான். நீ என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து எனது கட்டளைகளைச் செய்து முடிக்கவேண்டும்.
நீ இவ்வாறு செய்து வந்தால், இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தவனாகவே இருப்பான். இந்த வாக்குறுதியைத்தான் உனது தந்தையான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறேன். நான் அவனிடம், ‘இஸ்ரவேல் உன் சந்ததியிலிருந்தே எப்பொழுதும் ஆளப்படும்’ என்று கூறியிருக்கிறேன்.
(6-7) “ஆனால் நீயோ அல்லது உன் பிள்ளைகளோ என்னைப் பின்பற்றாமல், நான் உனக்குத் தந்த சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வீர்களேயானால், நான் உங்களுக்குத் தந்த இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவேன். மற்ற எல்லா தேசங்களின் ஜனங்களும் இஸ்ரவேலர்களை எண்ணி நகைக்கக்கூடாது. நான் ஆலயத்தைப் பரிசுத்தமாக்கினேன். இந்த இடத்தில் ஜனங்கள் என்னை மகிமைப்படுத்தலாம். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் உங்களை விலக்குவேன்.
மற்றவர்களோ, ‘அவர்கள் தமது தேவனாகிய கர்த்தரை விட்டு விலகினார்கள். அதனால் இவ்வாறு ஆயிற்று. அவர்களது முற்பிதாக்களை அவர் எகிப்திலிருந்து மீட்டார். ஆனால் அவர்களோ அந்நிய தெய்வங்களை நாடினார்கள். அதனால் கர்த்தர் அவர்களுக்கு இது போன்ற தீமைகளைச் செய்தார்’ என்பார்கள்” என்றார்.
அதற்குப் பின் சாலொமோன் ஈராமுக்கு கலிலேயாவில் 20 நகரங்களைக் கொடுத்தான். காரணம் அவன் ஆலயத்தையும் அரண்மனையும் கட்ட உதவி செய்தான். சாலொமோனுக்குத் தேவையான கேதுரு மரங்களையும் தேவதாரு மரங்களையும் தங்கத்தையும் கொடுத்து வந்தான்.
ஈராம், “என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது.
சாலொமோன் ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட அடிமைகளை கட்டாயப்படுத்தினான். மேலும் அவர்களைப் பயன்படுத்தி பலவற்றைக் கட்டினான். அவன் மில்லோவைக் கட்டினான். எருசலேம் நகரைச் சுற்றி ஒரு சுவரையும் பின்னர் ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
முன்பு, எகிப்து மன்னன் கேசேரைச் சண்டையிட்டு எரித்துவிட்டான். அங்கு வாழ்ந்த கானானியரையும் கொன்றான். சாலொமோன் பார்வோன் மன்னனின் மகளையும் மணந்துக்கொண்டான். எனவே திருமணப் பரிசாக இந்நகரத்தைச் சாலொமோன் பெற்றுக்கொண்டான்.
தன் தானியங்களைச் சேகரித்து வைத்த நகரங்களையும் தன் இரதங்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கும் நகரங்களையும் அவன் கட்டினான். அவன் எருசலேம், லீபனோன் மற்றும் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் தான் விரும்பியவற்றையெல்லாம் கட்டினான்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்றுமுறை சாலொமோன் பலிபீடத்தில் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். இது சாலொமோனால் கர்த்தருக்காகக் கட்டப்பட்ட பலிபீடம். அவன் கர்த்தருக்கு முன் நறுமணப் பொருட்களை எரித்தான். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவந்தான்.