ஈராம், தீரு எனும் நகரத்தின் அரசன், ஈராம், தாவீதுக்கு தூதுவனை அனுப்பியிருந்தான். அதோடு கேதுரு மரத்தடிகளையும், கல்தச்சர்களையும், மரவெட்டிகளையும் அனுப்பியிருந்தான். தாவீதிற்கு வீடு கட்டவே ஈராம் இவற்றை அனுப்பினான்.
உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் அரசனாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.
இஸ்ரவேலின் அரசனாகத் தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டதை பெலிஸ்தர்கள் அறிந்தனர். எனவே பெலிஸ்தர்கள் அனைவரும் தாவீதை தேடுவதற்காக வந்தார்கள். இதனை தாவீது கேள்விப்பட்டான். பிறகு தாவீது பெலிஸ்தர்களோடு போரிடச் சென்றான்.
பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் பாகால் பிராசீம்வரை சென்றனர். அங்கே தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தர்களைத் தோற்கடித்தனர். தாவீது அவர்களிடம், “உடைந்த அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைப்போல, என் எதிரிகளிடமிருந்து தேவன் வெற்றிக் கண்டுள்ளார்! தேவன், இதனை என் மூலம் செய்தார்” என்றான். அதனால் அந்த இடம் பாகால்பிராசீம் என்ற பெயரைப் பெற்றது.
தாவீது மீண்டும் தேவனிடம் ஜெபித்தான். தாவீதின் ஜெபத்திற்குத் தேவன் பதில் சொன்னார், தேவன், “நீ பெலிஸ்தர்களைத் தாக்கும்போது அவர்களுக்கு முன்பாகப் போகாதே. அதற்குப் பதிலாக அவர்களைச் சுற்றிக்கொண்டு செல். நறுமணம் வீசும் திரவங்கள் வடியும் மரங்களுக்குப்பின் மறைந்துக்கொள்.
அவற்றின் மீது ஏறு. அதன் மேலிருந்து உன்னால் படைகளின் வருகை ஒலியைக் கேட்க முடியும். அப்போது, பெலிஸ்தர்களை நீ தாக்கு. நான் (தேவன்) உனக்கு முன்னால் போய் பெலிஸ்தர்களைத் தோற்கடிப்பேன்!” என்றார்.
தேவன் சொன்னபடியே தாவீது செய்தான். அதனால் தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தரின் படைகளை வென்றனர். பெலிஸ்தர் வீரர்களை கிபியோன் முதல் காசேர்வரை அவர்கள் கொன்றார்கள்.